வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து ஒத்திகை

மேட்டுப்பாளையம்: வெள்ளத்தில் மக்கள் சிக்கினால் அவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சிறுமுகை அருகே பாவனி ஆற்றில் நேற்று நடந்தது. கேரளா, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை முழுக்கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது.இதனால் அணையின் பாதுகாப்புக்கருதி உபரிநீரானது நான்கு மதகுகளின் வழியாக பவானியாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை லிங்காபுரம் 20 அடி உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது. 150க்கும் மேற்பட்ட பழங் குடியின மக்கள் வசிக்கும் மூன்று கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பவானியாற்றின் கரையோரப்பகுதிகளான மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, சிறுமுகை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்,ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ,துணி துவைக்கவோ ஆற்றில் இறங்கக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் மக்கள் சிக்கினால் அவர்களை மீட்பது  குறித்து தமிழ்நாடு தீயணைப்பு துறையினருடன் இணைந்து தேசிய பேரிடர்  மீட்புக்குழுவினர் நேற்று லிங்காபுரத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம்,கோவை வடக்கு தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள உதவி ஆய்வாளர் சந்தன்குமார் தலைமையிலான 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து இதில் பங்கேற்றனர். அப்போது, பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கினால் அவர்களை காப்பாற்றுவது எப்படி? எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்? என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் வட்டாட்சியர் ஷர்மிளா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயகுமார், துணை வட்டாட்சியர் பாலமுருகன், சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா,சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி,வருவாய் ஆய்வாளர் தெய்வபாண்டியம்மாள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி,யோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>