வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67 லட்சமாக அதிகரிப்பு: 58 வயதை கடந்தவர்கள் மட்டும் 10,907 பேர்

சேலம்: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.76 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், 10,907 பேர் 58 வயதை கடந்து விட்டனர்.  தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்பின்னர், மதிப்பெண், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பதிவு மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. அதேசமயம், எழுத்துத்தேர்வு அல்லாமல், நேரடி பணி நியமனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் பதிவு செய்தவர்களுக்கு, அவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் நேரடி நியமனங்கள் நடக்கின்றன. இதனால், தமிழக இளைஞர்கள் தங்களது பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் வரை அனைத்தையும் வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். இதனிடையே, கடந்த மாதம் 30ம் தேதி வரையில், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்தவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை, 67.76 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 24 முதல் 35 வயது உடைய இளைஞர்களே அதிகளவில் உள்ளனர். அதாவது 24.88 லட்சம் இளைஞர்கள், இந்த வயது பிரிவில் அரசுப்பணிக்காக காத்திருக்கின்றனர். 

அடுத்தபடியாக, 19 முதல் 23 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 16.49 லட்சம் பேரும், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 14.01 லட்சம் பேரும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வரிசையில், 36 முதல் 57 வயது வரை உள்ள 12.26 லட்சம் பேர் முதிர்வு பெற்ற பதிவுதாரர்களாக இருக்கின்றனர். தமிழகத்தில் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மீண்டும் 58 ஆக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 58 வயதை கடந்த 10,907 பேர், இன்னமும் தங்களது பதிவை புதுப்பித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக, 67,76,945 பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பணிக்காக பதிவு செய்துள்ளவர்களில், கை, கால் குறைபாடுடையோர் 1.06 லட்சம், பார்வை குறைபாடு உள்ளவர்கள் 16,525 பேர், காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத 13,849 பேர் என, மொத்தம் 1.36 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 90,522 பேரும், பெண்கள் 45,993 பேரும் அடங்குவர்.

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளவர்கள், அவர்களின் கல்வித்தகுதி வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்த 2.83 லட்சம் பேர், பத்தாம் வகுப்பு படித்த 18.42 லட்சம் பேர், பிளஸ் 2 முடித்த 17.71 லட்சம் பேர், டிப்ளமோ முடித்தவர்கள் 93,937 பேர் என பட்டப்படிப்பை நிறைவு செய்யாத 46.67 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். அடுத்தபடியாக, இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 11.75 லட்சம் பேர் உள்ளனர். இதில், கலைப்பிரிவில் 2.96 லட்சம் பேர், அறிவியல் பிரிவில் படித்த 4.48 லட்சம் பேர், வணிக பிரிவில் பட்டம் முடித்த 2.57 லட்சம் பேர் அடங்குவர். இதேபோல், கலை, அறிவியல், வணிகம், இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற 9.34 லட்சம் பேரும், அரசுப்பணிகளுக்காக பதிவு செய்து காத்திருப்பதாக, வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆசிரியர் பணிக்கு மட்டும் 5 லட்சம் பேர் காத்திருப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பட்டய தேர்வை முடித்திருக்க வேண்டும். இதேபோல், உயர்நிலை வகுப்பெடுப்பவர்கள் இளங்கலை பட்டத்துடன் ஆசிரியர் கல்வியும், மேல்நிலை வகுப்பெடுப்பவர்கள் முதுகலை பட்டத்துடன் ஆசிரியர் கல்வியும் நிறைவு செய்திருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் பட்டயம் முடித்த 1,70,243 பேரும், இளங்கலை பட்டத்துடன் பிஎட் முடித்த 85,310 பேரும், முதுகலையுடன் பிஎட் /எம்எட் முடித்த 2,42,711 பேரும் என மொத்தம் 4,98,264 பேர், அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர், என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: