×

களக்காடு அருகே கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானை அட்டகாசம்

களக்காடு: களக்காடு அருகே கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானையும்  விளைநிலங்களுக்குள் புகுந்து பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர். களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக விளைநிலங்களில் கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தண்ணீர்  குழாய்களை உடைத்தும், மாங்காய்கள், நெல்லிக்காய்களை பறித்தும் சேதப்படுத்தி  வருகின்றன. இந்த கரடிகளை விரட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் களக்காடு தலையணை  மலையடிவாரத்தில் ஒற்றை யானையும் அட்டகாசம் செய்து வருகிறது.  மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்துள்ள ஒற்றை யானை, இரவு நேரங்களில்  கள்ளியாறு விளைநிலங்களுக்குள் புகுந்து பனை மரங்களை வேருடன் சாய்த்து  வருகிறது. களக்காடு புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேசுக்கு சொந்தமான 2  பனை மரங்களை யானை சாய்த்துள்ளது. இதுபற்றி களக்காடு  புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து  புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர் பாலாஜி  மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று யானை சாய்த்த பனை மரங்களை  பார்வையிட்டனர். விவசாயிகளை அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள்  விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன் யானை நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்  என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 



Tags : Jungle, bear, elephant, ostrich
× RELATED தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்