×

அரியானாவில் சிறுவன் பலியான நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல்: கொத்து கொத்தாக கோழிகள் சாவு

திருவனந்தபுரம்: அரியானாவில் பறவைக் காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில், கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு  மாவட்டம், கூராசுண்டு பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை  உள்ளது. 2 தினங்களுக்கு முன் இந்த பண்ணையில் இருந்த 300க்கும்  மேற்பட்ட கோழிகள் திடீரென கொத்து கொத்தாக இறந்தன. இது குறித்து அறிந்ததும் கால்நடை  பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.   இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரம், ஆலப்பழாவில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில்,  ஒரு பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகள் இறந்ததற்கு பறவை  காய்ச்சல் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. மற்றொரு பரிசோதனை கூடத்தில்  நடத்தப்பட சோதனை பறவை காய்ச்சல் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, கூடுதல்  பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி   வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கொரோனா, ஜிகா வைரஸ் என  அச்சத்தில் வாழும் கேரள மக்களுக்கு அடுத்து பறவை காய்ச்சல் பரவல் கடும்  பீதியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் அரியானா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தான்.

இந்நிலையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோழிகள் இறந்த பண்ணையில்  இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில், அனைத்து கோழிப்பண்ணைகளையும் மூட  கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Aryana ,Kerala , Haryana, boy, Kerala, bird flu
× RELATED முக்கியமான பிரச்னைகள்ல கம்முன்னு...