பெகாசஸ் தொழில்நுட்பம் இருப்பதால்தான் மக்கள் நிம்மதியாக தூங்குறாங்க இரவில் பாதுகாப்பா நடக்குறாங்க: நியாயப்படுத்தும் என்எஸ்ஓ

ஜெருசலேம்: ‘உளவு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க பிரிவுகளிடம் பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்கள் இருப்பதால்தான் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக இரவில் தூங்க முடிகிறது, தெருவில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிகிறது’ என இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ குழுமம் தயாரித்துள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் உலக அளவில் சர்ச்சையாகி உள்ளது. செல்போன்களை ஒட்டு கேட்டு தகவல்களை எடுக்கக் கூடிய இந்த மென்பொருள், ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு மட்டுமே விற்கப்படும்.

அந்த வகையில் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பல நாடுகளிலும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலில் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில், பெகாசஸ் தொழில்நுட்பம் குறித்து என்எஸ்ஓ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இன்று உலகில் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக இரவில் தூங்குகிறார்கள், தெருவில் பாதுகாப்பாக நடக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்கள் தான். இதுபோன்ற தொழில்நுட்பங்களை புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் கைவசம் வைத்திருப்பதால், தீவிரவாத நாசவேலைகளை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடிகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மூலம் நாசவேலைகள் செய்யப்படுவதை கண்காணிக்க  எந்தவொரு தீர்வும் இல்லாததால், என்எஸ்ஓ உலகின் பல இணைய உளவு நிறுவனங்களுடன் இணைந்து, அரசாங்களுக்கான இணைய உளவு கருவியை வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தை என்எஸ்ஓ நிறுவனம் இயக்குவதில்லை. அதே நேரம், இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்ட் -டு-என்ட் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால், அவற்றை எங்களால் அணுக முடியாது. பாதுகாப்பான உலகத்தை உருவாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இவ்வாறு கூறி அவர் உள்ளார். முன்னதாக, என்எஸ்ஓ நிறுவனம் கடந்த 2019ல் அளித்த பதில் ஒன்றில், ‘கடுமையான குற்றங்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தவிர வேறு விஷயங்களுக்கு எங்கள் தயாரிப்பை பயன்படுத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ரத்து செய்யப்படும். தவறான பயன்பாட்டை கண்டறிந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த தொழில்நுட்பம் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை கொண்டது’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கவலை

பெகாசஸ் விவகாரம் குறித்து அமெரிக்காவின் தொற்று மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயல் உதவி செயலாளர் டீன் தாம்சன் அளித்த பேட்டியில், ‘சிவில் சமூகம், ஆட்சியை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எந்த ஒரு நபரிடமும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. இது இந்தியாவுக்கானது மட்டுமல்ல, பரந்து விரிந்த பிரச்னை. இந்த விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்,’ என கூறினார்.

Related Stories: