×

கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து 10 அடி தள்ளியே இருக்கணும்...காற்றில் சுற்றி பரவும் வைரஸ் சிஎஸ்ஐஆர் அதிர்ச்சித் தகவல்

புதுடெல்லி: ‘கொரோனா தொற்று உள்ளவரிடம் இருந்து 10 அடி தூரம் வரையிலும் வைரஸ் காற்றில் பரவும்’ என அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில்  பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வு ஒன்றில், கொரோனா பாதித்த நபரிடம் இருந்து 10 அடி தூரத்திற்கு காற்றில் வைரஸ் பரவலை கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘சிஎஸ்ஐஆர் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 10 அடி தூரம் அல்லது 3.048 மீட்டர் தூரம் வரையிலும் காற்றில் வைரஸ் பரவும். காற்று வீசும் தன்மையை பொறுத்து, நுண்நீர்த்துளிகள் மூலம் இந்த வைரஸ் மேலும் நீண்ட தூரத்திற்கும் பரவ முடியும் என கூறப்பட்டுள்ளது,’ என்றார்.எனவே, பொது இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும், அடிக்கடி கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மற்றொரு கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘இதுவரை 57,476 சார்ஸ் வைரஸ் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 44,334 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, மரபணு வகைப்பாடு பிரிக்கப்பட்டு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் சமர்பிக்கப்பட்டு உள்ளது,’ என கூறி உள்ளார். கொரோனா வைரசின் அடுத்தடுத்த பிறழ்வுகளை கணிக்க இந்த மரபணு வகைப்பாடு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வங்கதேசத்துக்கு 200 டன் ஆக்சிஜன்
கொரோனா 2வது அலையின்போது இந்தியாவில் ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடைக்குப் பிறகு முதல் முறையாக அண்டை நாடாக வங்கதேசத்துக்கு ஒன்றிய அரசு 200 டன் மருத்துவ ஆக்சிஜனை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள டாடாநகர் ரயில் நிலையத்தில் இருந்து 10 டாங்குகள் மூலமாக நேற்று அனுப்பி வைத்தது. இது, வங்கதேசத்தில் உள்ள பெனாபோல் ரயில் நிலையத்தை இன்று சென்று சேரும்.

Tags : Corona ,CSIR , Corona, virus, CSIR, shock
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...