×

I will go out

நன்றி குங்குமம் தோழி

இரவு நேரம் மிகவும் ரம்மியமானது தான். ஆனால் அதன் நிசப்தத்தையோ அழகையோ எல்லாராலும் அனுபவிக்க முடியாது. குறிப்பாக பெண்கள். வேலைக்கே போகும் பெண்களாக இருந்தாலும், அவர்களில் பலர் இரவு நேர வேலை என்றால் ஒரு நிமிடம் யோசிக்கத் தான் செய்கிறார்கள். காரணம் பாதுகாப்பின்மை. மாலையில் வேலை முடித்துவிட்டு இரவு சில மணி நேரம் தாமதமானாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பிச்சிடும். ஏன் இன்னும் வரல... நேரமாச்சு...ன்னு பதட்டப்பட ஆரம்பிச்சிடுவார்கள். அல்லது அலைபேசியில் அழைத்து அவர்களின் நிலையை பற்றி தெரிந்து கொள்வார்கள்.

இது ஒரு புறம் என்றால், நாம் பழக்கப்பட்ட தெருவாகவே இருந்தாலும் இரவு நேரத்தில் அதே தெரு நமக்கு அன்னியமாகத்தான் தோன்றும். இரவு நேரங்களில் பெண்கள் தோழிகளுடன் உரையாடியபடி, சிரித்தபடி, பிடித்த பாடலை முனங்கியபடி நடந்து போவதை நாம் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இருட்ட ஆரம்பித்ததும், பெண்களுக்குள் தானாகவே ஒரு சஞ்சலமும் பதற்றமும் வந்துவிடுகிறது. இரவு மட்டுமல்ல காலை நேரங்களிலும்.. அவர்கள் வசிக்கும் இடமாக இருந்தாலும் சில சந்துகள் மற்றும் தெருக்களை மட்டும் கடக்கும் போது அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவோ அல்லது அந்த தெருக்களை தவிர்ப்பது வழக்கம்.

காரணம் திருட்டு பயமோ அல்லது நாய் தொந்தரவோ கிடையாது. எல்லா வயது பெண்களும் சந்திக்கும் பாலியல் தொல்லைகள்தான். ‘‘ஆறு மணிக்கு மேல, பொம்பள புள்ளைக்கு வெளியில என்ன வேலை? இந்த நேரத்துலதான் வெளியில போணுமா, பகல் நேரத்துல வெளியில போனா என்ன?” போன்ற கேள்விகளை கடந்துதான் மாலை நேரங்களில் இன்றும் பெண்களால் வெளியே செல்ல முடிகிறது.

அப்படியே வெளியில் சென்றாலும், ‘ஜாக்கிரதையா போ, சீக்கிரம் வந்திடு’ என்று பல அறிவுரைகளை நம் காதினில் வாங்கிய பிறகு வீட்டை விட்டு நகர முடியும். வீட்டிலிருந்து கிளம்பிய பத்து நிமிடத்திற்குள் நூறு முறை போன் செய்து அம்மா, ‘எங்க இருக்க?’ என்று விசாரிப்பாள். எத்தனை பெண்கள் ஹோட்டலில் தனியாக சாப்பிட்டிருப்பார்கள்? திரையரங்கில் தனியாக அமர்ந்து படம் பார்த்திருப்பார்கள்? பெண்கள் தனியாக வெளியில் இருக்கும் போது பதற்றமடைய காரணம், அங்கு பெரும்பாலும் ஆண்களே இருக்கின்றனர்.

ஆண்கள்தான் பொதுவெளியை பொது இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால், பொதுவெளியில் பொது இடங்களில் பெண்கள்  எப்போதும் முன் எச்சரிக்கையுடனே இருக்கின்றனர்.பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்க, அவளது உடையும், அவள் வெளியிலிருந்த காரணமுமே அவளுக்கு எதிரியாய் இருக்கிறது.

ஒரு பெண் எக்காரணமும் இன்றி வெளியில் செல்லும் போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களே அவளை குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் பார்க்க இந்த சமூகம் தூண்டுகிறது. பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பல விவாதங்களும் விழிப்புணர்வுகளும் நடந்துகொண்டிருக்கையில், பெண்கள் பொது இடங்களில் தங்களின் உரிமையை கோர ஆரம்பித்திருக்கின்றனர்.

Blank Noise என்ற அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களிலும் பெண்களை ஒன்று திரட்டி ‘Meet To Sleep’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த கூட்டத்தில் பெண்கள் கூச்சலிட்டு எந்த விவாதங்களும் செய்யவில்லை, மணிக்கணக்காக நடந்து போராட்டமும் செய்யவில்லை. மாறாக, அவர்கள் பூங்காவில் உள்ள புல் தரையிலும், பெஞ்சுகளிலும் அமைதியாய் உறங்கினார்கள். சிலர் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரசித்தபடி அமர்ந்திருந்தனர். சிலர் புத்தகங்கள் வாசித்தபடி இருந்தனர்.

யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பொது இடங்களில் ஒரு பெண் ‘சும்மா’ இருப்பதே பாலியல் வன்முறைக்கு எதிரான ஒரு பலமான ஆயுதமாகத்தான் பார்க்கவேண்டும். 2012ல் நிர்பயாவிற்கு நேர்ந்த கூட்டு பாலியல் கொடுமையை அடுத்து, நாடு முழுவதும் அதனை கண்டித்து கொந்தளிப்புகள் எழுந்தன. சில அரசியல் தலைவர்களும், வழக்கறிஞர்களுமே கூட, நிர்பயாவிற்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு ஒரு விதத்தில் அவரேதான் காரணம் என்று பேசினர்.

ஏன் நம் குடும்பங்களிலும் கூட ‘அய்யோ அந்த பொண்ணு ஏன் ராத்திரி நேரம் தனியா போச்சு?’ போன்ற குரல்களை கேட்டு இருப்போம். இந்த விவாதங்களை அடுத்து உருவானதே இந்த #IWillGoOut என்ற பிரச்சாரம். இதன்படி, பெண்கள் இரவு நேரங்களில் ஒன்று கூடி, அமைதியாய் நிலவொளியில் அதன் அழகை ரசித்தபடி நடந்து செல்கின்றனர். இதில் தங்களுக்கு பாதுகாப்பாய் கைத்தடி முதல் மிளகாய் பொடி வரை எது வேண்டும் என்றாலும் எடுத்து வரலாம்.

இரவு நேர ‘ஊர் சுற்றலின்’ போது, இலக்கியம், அரசியல், பெண் சுதந்திரம் தாண்டி கேக், குக்கீஸ், சிப்ஸ் எனக் கொண்டுவந்து, தங்களின் விடுதலையை சுவைத்தபடி இரவை கடக்கின்றனர்.அதே போல் 2014ல் ஆரம்பிக்கப்பட்ட #WhyLoiter என்ற இயக்கம் பெண்கள் இனிமேலும் பயந்து, அடங்கி வீட்டிற்குள் இருக்க வேண்டாம் என்பதை சுட்டிக்காட்டியது.

‘Why Loiter’ என்ற புத்தகத்தை தழுவி ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், பெண்கள் ஏதாவது வேலை இருந்தால் அல்லது யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் மட்டுமே வெளியில் வருகின்றனர். அதுவும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு அவர்கள் என்றுமே போக விரும்புவதில்லை. ஆனால், பெண்கள் எந்த தயக்கமும் பதற்றமும் இல்லாமல் பொது வெளியில் இருக்க வேண்டும்.

ஆண்களும், ‘பொது’ இடங்களில் பெண்களுக்கும் சரிசமமான பங்கிருப்பதை உணர வேண்டும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்தியது. இந்த சுதந்திர தினத்தை யொட்டி, ஆகஸ்ட் 15-16 தேதிகளில் முதல் முறையாக 12 மணி நேரம் பெண்கள் ஒன்று கூடி தில்லி நகரில் நடக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்துமே, ஒரு பெண்ணின் சரியான இடம் சமையலறையும், அவள் வீடும்தான் என்ற வாக்கை மாற்ற முற்படுகிறது.

இந்த உலகில் ஆண்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சின்ன சுதந்திரமும், பெண்களுக்கும் உரியது என்பதையும் இவர்கள் பறைசாற்றி வருகிறார்கள். இன்னும் எவ்வளவு காலம்தான் ‘சிண்ட்ரெல்லா’ போல இரவு நேரம் வீடு போய் சேர ஓடிக்கொண்டிருக்க போகிறோம், கொஞ்சம் நிதானமாய் செல்வோம்.

- ஸ்வேதா கண்ணன்.

Tags :
× RELATED சாதனை படைக்க அதீத தைரியம் அவசியம்!