ஆன்லைன் வர்த்தகம் மூலமாக இந்தியாவில் ஊடுருவும் சீனா: ஒன்றிய அரசு, அமேசான் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: டிஜிட்டல் சந்தை மூலமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் சீன நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்கும்படி ஒன்றிய அரசு, அமேசான் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சீனாவின் டிக்டாக், வீசாட், ஷேர்மீ உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு கடந்தாண்டு ஜூனில் ஒன்றிய அரசு தடை விதித்தது. இதில், ‘ஷீன்’ என்னும் சீன செயலியும் அடங்கும். இந்நிலையில், இந்த ஷீன் நிறுவன தயாரிப்புகள் அமேசான் வலைதள சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனந்திகா சிங் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், `ஒன்றிய அரசு தடை விதித்த சீன செயலிகளில் ஒன்றான ஷீன் நிறுவன தயாரிப்பு பொருட்கள் அமேசான் வலைதள சந்தை மூலமாக இந்தியாவில் விற்கப்படுகிறது. அமேசான் நிறுவன பாதுகாப்பு கொள்கைகளின்படி, தனது பயனாளர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்த விற்பனையாளர்களுக்கு பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியர்களின் தனிநபர் தகவல் சீன நிறுவனங்களுக்கு கிடைக்கக் கூடும். இதனால், நாட்டின் இறையாண்மைக்கும், நலனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஷீன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்யும் வரை ஷீன் நிறுவன தயாரிப்புகளை இந்தியாவில் விற்க தடை விதிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதை  நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டிஎன். படேல் அமர்வு, `அமேசான் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. அதே நேரம், இந்த மனுவுக்கு ஒன்றிய அரசும், அமேசான் நிறுவனமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,’ என்று தெரிவித்தது.

Related Stories:

>