இந்து அறநிலையத்துறை கோயில்களில் காணிக்கையாக உள்ள தங்க நகையை பிஸ்கட்டாக மாற்றி ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்ட திட்டம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சேலம்: ‘‘இந்து அறநிலையத்துறை கோயில்களில் காணிக்கையாக உள்ள தங்க நகைகளை பிஸ்கட்டாக மாற்றி ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளோம்’’ என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சேலம் வந்தார். அவர், பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளையும், கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்து வரும் புதிய கட்டுமானம் மற்றும் திருப்பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குபின் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கிற்காக கடந்த 2015ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. சுகவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

இரு கோயில்களின் பணிகளும் முடிவடைய கால தாமதமாகியுள்ளது. அதனை விரைவுபடுத்தி குடமுழுக்கு நடத்திட கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கோயில்களுக்கு பொருளாதாரத்தை ஈட்ட நிலங்களை குத்தகைக்கு விடுவது, நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுப்பது போன்ற பணிகள் வெளிப்படை தன்மையோடு மேற்கொள்ளப்படும்.  கோயில்களில் காணிக்கையாக கிடைத்த தங்க நகைகள் கடந்த 9 ஆண்டுகளாக உருக்கப்படாமல் உள்ளது. அந்த நகைகளை கோயில்களின் தேவைக்குப் போக மீதியுள்ளவற்றில் விலை உயர்ந்த கல், அரக்கு போன்றவற்றை தனியாக பிரித்து, மும்பையில் உள்ள இந்திய அரசின் அனுமதி பெற்ற ஆலையில் உருக்கி தங்க பிஸ்கட்களாக மாற்றவுள்ளோம்.

அந்த தங்க பிஸ்கட்களை வைப்புநிதியாக வைத்து 2.5 சதவீத வட்டி கிடைக்கச் செய்யப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவிற்கு வட்டி வருவாய் கிடைக்கும் சூழல் இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தொழில்நுட்ப குழு ஏற்படுத்தப்படுகிறது. நகை மதிப்பீட்டாளர்கள், இணை ஆணையர்கள் அடங்கிய அக்கமிட்டி சிறு தவறு கூட நடக்காத வண்ணம், வெளிப்படை தன்மையோடு செயலாற்றும். அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதேபோல், 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் நடக்கும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கார்மேகம்  ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>