நாட்டில் முதல் முறையாக ரூ.25 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலில் டிரோன் எதிர்ப்பு ஆயுதம்: தீவிரவாத தாக்குதலை தடுக்க ஏற்பாடு

திருமலை: தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ரூ.25 கோடி செலவில் அதிநவீன டிரோன் தடுப்பு ஆயுதம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் கடந்த மாதம் தீவிரவாதிகள் டிரோன்கள் ஏவி தாக்குதல் நடத்தினர். நாட்டில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, டிரோன்கள் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. எனவே, டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ளது. இந்த நவீன ஆயுதம், நாட்டிலேயே முதல் முறையாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ சார்பில், டிரோன் எதிர்ப்பு ஆயுதத்தின் செயல் விளக்கம் சமீபத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்தது. இதில், தேவஸ்தான பாதுகாப்பு பிரிவு தலைவர் கோபிநாத் ஜெட்டி மற்றும் பல்வேறு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆயுதம், டிரோன்களை கண்டறிந்து, அவற்றை செயல் இழக்கச் செய்து, அழிக்கும் வல்லமை படைத்தது. இதன் விலை ரூ.25 கோடி. இந்த ஆயுதத்தில் 2 விருப்பத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று, ஷாப்ட் கில், மற்றொன்று ஹார்டு கில். ஷாப்ட் கில் மூலம் 4 கிமீ தொலைவில் ரேடியோ அலைவரிசையை செயல் இழக்க செய்து, டிரோனின் தகவல் தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் அணுகலை துண்டிக்கலாம்.

ஹார்ட் கில் ஆப்ஷன் மூலம் 150 மீட்டர் முதல் 1 கிமீ தொலைவுக்குள் சிறிய ரக டிரோன்களை கண்டறிந்து, இலக்கு நிர்ணயித்து, தகர்த்து அழிக்கலாம். இந்த டிரோன் எதிர்ப்பு ஆயுதத்தை பெல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இதனை திருமலையில் எங்கு அமைக்கலாம் என்பது தொடர்பாக பெல் அதிகாரிகள் விரைவில் கள ஆய்வு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: