செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு; அறிக்கையை கிழித்த திரிணாமுல் எம்பி சஸ்பெண்ட்

புதுடெல்லி: செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவையில் அமைச்சரின் ்அறிக்கயை பறித்து கிழித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, இத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு உள்ளிட்ட விவகாரங்களால் கடும் அமளி நடந்து வருகிறது. மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்ய முயன்ற போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் அதை பறித்து கிழித்து காற்றில் பறக்கவிட்டார்.

இதைத் தொடர்ந்து, சாந்தனுவுக்கு எதிராக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளீதரன் மாநிலங்களவையில் நேற்று கண்டன தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதால், கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் சாந்தனு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 12 மணி  வரையிலும் பின்னர் 12.30 மணி வரையிலும் மாநிலங்ளங்கவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 12.30 மணிக்கு அவை கூடிய போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் எம்பி சாந்தனு சென் அவையை விட்டு வெளியேற வேண்டுமென அவைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் கேட்டுக் கொண்டார். அவை விதிமுறைப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி வெளியேறாத வரை எந்த அலுவலும் நடத்தப்படக் கூடாது.

ஆனால், சாந்தனு வெளியேறாத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எம்பி.க்கள் அமளி செய்தனர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் சாந்தனு அவையிலேயே இருந்தார். மறுபுறம் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென அவையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே வலியுறுத்தினார். ஆனால், ஏற்கனவே சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் விளக்கம் அளித்து விட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால் அமளி தொடர்ந்ததால் அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை கிளப்பி அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ் மூத்த எம்பிக்கள் சசிதரூர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி. வேணுகோபால், திமுக எம்பி கனிமொழி, சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கட்சி தலைவரானார் மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக, அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அக்கட்சியின் மூத்த எம்பி டெரிக் ஓ பிரையன் நேற்று தெரிவித்தார். 7 முறை எம்பியாக இருந்த அனுபவமிக்க மம்தா, நாடாளுமன்றத்தில் திரிணாமுல்  எம்பிக்களை வழிநடத்துவார் என பிரையன் கூறினார்.

தடுப்பூசி அரசியல்

மக்களவையில் கேள்வி நேரத்தில் துணை கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, ‘‘கொரோனா மற்றும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. இதைத்தான் பிரதமர் மோடியும் பலமுறை கூறி வருகிறார். தடுப்பூசி குறித்த உண்மைத் தகவல்களை மட்டுமே நான் வெளியிட்டு வருகிறேன். அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி நிறுவனத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாடர்னா நிறுவனம் இந்தியாவில் அனுமதி கோரி பதிவு செய்துள்ளது,’’ என்றார்.

பாகிஸ்தான் கவலை

பெகாசஸ் உளவு மென்பொருளை கொண்டு இந்தியர்களை மட்டுமின்றி வெளிநாட்டு தலைவர்களையும் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் ஒன்றிய அரசு உளவு பார்த்திருப்பதாக சர்வதேச மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன. இதற்கு பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உள்ளிட்டவர்களையும் இந்திய அரசு உளவு பார்த்ததாக சர்வதேச மீடியாக்களில் வெளியான செய்தி குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், அமைச்சரின் அறிக்கையை கிழித்தது பற்றி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு  கூறுகையில், ‘‘அவை நடவடிக்கையின் தரம், அமைச்சரிடமிருந்து அறிக்கையை பறித்து கிழித்தெறியும் அளவுக்கு தாழ்ந்து போயுள்ளது. இதுபோன்ற செயல்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்,’’ என்றார்.

ஆய்வுக்குழு அமைத்தது இஸ்ரேல்

பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது பற்றி பிரான்ஸ் அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமான இஸ்ரேலும் மறுஆய்வுக்குழு அமைத்து, யார் யாருக்கு பெகாசஸ் மென்பொருள் லைசன்ஸ் வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தி, தவறுகள் திருத்தப்படும் என இஸ்ரேல் அரசு கூறி உள்ளது.

Related Stories: