ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா-நியூசி. இன்று மோதல்

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில், இந்தியா தனது முதல்  லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. ஒலிம்பிக் ஹாக்கியில் அதிக தங்கம் வென்றது மட்டுமல்ல, அதிக  பதக்கங்கள் வென்ற நாடும் இந்தியாதான். ஆனால், 1980க்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் என்பதே இந்தியாவுக்கு பகல் கனவாகிவிட்டது. இம்முறை மகளிர், ஆடவர் என  இரண்டு அணிகளும்  வலுவான அணிகளாக  ஜப்பான் சென்றுள்ளதால், பதக்கம் நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது தங்கமா, வெள்ளியா, வெண்கலமா என்பதுதான் கேள்வி. இந்நிலையில் ஆடவர், மகளிர் அணிகள் மோதும்  ஹாக்கி ஆட்டங்கள்  இன்று தொடங்குகின்றன.

மன்பிரீத் சிங்  தலைமையில் 18 பேர் கொண்ட ஆடவர் அணியும்,  ராணி ராம்பால் தலைமையில் 18 பேர் கொண்ட பெண்கள் அணியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டீனா, ஸ்பெயின் அணிகள் உள்ளன. பி பிரிவில்  நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, கனடா, ஜெர்மனி இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல்  ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும். காலிறுதி ஆக.1, அரையிறுதி  ஆக.3 மற்றும் வெண்கலம், தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் 5ம் தேதி நடைபெறும்.

இந்திய ஆடவர் அணி தனது முதல்  லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. மகளிர் ஹாக்கியிலும் 12 நாடுகள் களமிறங்குகின்றன. ஏ பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பி பிரிவில்  ஜப்பான், சீனா ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து,  ஸ்பெயின் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று ஜூலை 31ல் முடிந்து, காலிறுதி ஆட்டங்கள்  ஆக.2, அரையிறுதி ஆட்டங்கள் ஆக.4ல் நடைபெறும். தொடர்ந்து வெண்கலம், தங்கப் பதக்கங்களுக்கான ஆட்டங்கள் ஆக.6ம் தேதி நடக்கும்.

இந்தியாவுக்கு வாய்ப்பு எப்படி?

இந்தமுறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும். இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின்  ஆடவர்,  மகளிர் என இரு அணிகளும் வலுவாக இருக்கின்றன.  2012, 2016ல் இந்தியா சார்பில் வலுவான அணிகள் பங்கேற்றாலும், அப்போது செய்த சில தவறுகளால் பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்த முறை பயிற்சியாளர் கிரஹாம் ரீட்  அந்த  தவறுகளை சரி செய்து இளம் வீரர்களை கொண்ட அணிகளை ஜப்பான் அழைத்துச் சென்றுள்ளார்.  ஆடவர் அணிக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்கு அச்சரமாக முதல் போட்டியில் வெல்ல வேண்டியது அவசியம். எப்போதும் மற்ற அணிகள் இந்திய அணிக்கு முதல் ஆட்டத்தில் கடும் நெருக்கடி தருவார்கள். ஏனென்றால், இந்தியாவை வென்று விட்டால் அடுத்த அணிகளை வெல்வது எளிதாக இருக்கும்.

கூடவே முதல் போட்டியில் தோற்கடித்து விட்டால் இந்தியாவை மனதளவில் தளர வைத்து விடலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும். எனவே வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும். பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட்ஸ் ஹர்மன்பிரீத், ருபீந்தர்பால், அமீத்,  கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். அதேபோல் மகளிர் அணி முதல் ஆட்டத்திலேயே உலக சாம்பியன் நெதர்லாந்தை சந்திக்கிறது.  கேப்டன் ராணி ராம்பால்  நிறைய கோலடிக்கும் திறமையுள்ளவர்.  ஆடவர் அணி அளவுக்கு மகளிர் அணிக்கு நெருக்கடி இருக்காது. அதனால் இயல்பாக, சிறப்பாக விளையாட முடியும். அதனால் இந்திய மகளிர் அணி முதல் 4 இடங்களுக்குள் வரும் வாய்ப்பு அதிகம்.  - முன்னாள் கேப்டன்  வாசுதேவன் பாஸ்கரன்.

அகதிகள் அணி!  

ஒலிம்பிக் போட்டியில் எந்த நாடுகளையும் சேராத ஒரு குழுவும் பங்கேற்கிறது. அது  சொந்த நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்கள். அவர்கள்  வாழும் நாடுகளின் சார்பில் பங்கேற்காமல் தனி  அணியாக பங்கேற்கின்றனர். ஆனால் ஒருவருக்கு ஒருவருக்கு அறிமுகம் கிடையாது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள்  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் நிதியுதவி  மூலம் பயிற்சி பெற்றவர்கள்.   அப்படி இந்த முறை  8 வீராங்கனைகள் உள்பட 29 பேர் பங்கேற்கின்றனர்.  இவர்கள் அனைவரும்  தடகளம், மல்யுத்தம், நீச்சல், பேட்மின்டன் என தனிநபர் ஆட்டங்களிலேயே பங்கேற்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானை  சேர்ந்த  மசோமா ஜதா அலி (25). உள்ளூர் போர்களால்  பிரான்சுக்கு மசோமா குடும்பம் இடம் பெயர்ந்தது. சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான மசோமா, ‘சாலையில் சைக்கிள் ஓட்டுதல்’ பிரிவில் களம் காண உள்ளார்.

இவரது சகோதரியும் சைக்ளிங் வீராங்கனைதான்  அதேபோல்  ஈரானை சேர்ந்த  டினா போர்யூனஸ் (29) இப்போது நெதர்லாந்தில் அகதியாக இருக்கிறார்.  ஜூடோ வீராங்கனையான டினா   நாடற்றவர்களுக்கான  அகதி ஒலிம்பிக் குழு சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். சொந்த நாட்டை விட்டு விலகி இருந்தாலும் நம்பிக்கையை விட்டு அவர்கள் விலகவில்லை.    மசோமா, ‘பெண்கள் எதை வேண்டுமானாலம் சுதந்திரமாக செய்ய முடியும் என்பதை  நான் நிருபிக்க விரும்புகிறனே்’ என்றும் , டினா, ‘நீங்கள் விரும்பியதை  அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள்’ என்றும் நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.

Related Stories: