காஞ்சி எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு வீட்டுமனை விற்பனையில் ரூ.2.8 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது; 500க்கு மேற்பட்டோர் புகார்

காஞ்சிபுரம்: தவணை முறையில் வீட்டுமனை அளிப்பதாக கூறி சுமார் 500 பேரிடம், ரூ.2.8 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, தங்களது  பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானோர் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மாடவீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ஸ்ரீ பிராப்பர்ட்டீஸ் மற்றும் டீலர்ஸ் என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சிபுரம், வையாவூர், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளில் குறைந்த விலையில் தவணை முறையில் பணம் செலுத்துவோருக்கு வீட்டு மனை அளிப்பதாக கூறி, தலா ரூ.56 ஆயிரம் வரையில் வசூல் செய்தார்.

மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.56 ஆயிரம் கட்டினால் போதும் அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழ்மை உள்ளவர்கள் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில், ஸ்ரீதரை நம்பி பணம் கட்டினர். இதற்கிடையில், பொதுமக்களுக்கு, தன் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதை போல் அதற்கான பத்திரங்களையும், சான்றிதழ்களை கொடுத்துள்ளார். இதனை நம்பி ஏராளமானோர் ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதரிடம் பணம் கட்டி குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணம் கட்டிய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித்துள்ளார்.

அதிகளவில் ஆட்களை பிடித்து கொடுத்தால், வாடிக்கையாளர்களை ஏஜென்ட்களாக மாற்றி, அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் எனவும் பலரிடம் கூறியுள்ளார். இதையொட்டி பல வாடிக்கையாளர்கள் ஏஜென்டுகளாக செயல்பட்டு அவர்களது உறவினர்கள், நண்பர்களை சேர்த்து விட்டுள்ளனர். ஆனால், வீட்டுமனைக்காக கட்டிய  சுமார் 500 பேரிடம், ரூ.2.8 கோடியை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணையில், 500 க்கும் மேற்பட்டோரை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் ஏமாற்றியது தெரியவந்தது. இதையறிந்த ஸ்ரீதர், திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து போலீசார் அவரை, வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில், காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் உள்ள ஒரு வீட்டில், ஸ்ரீதா் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, ஸ்ரீதரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  

இதைதொடர்ந்து, காலை, காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரிடம், வீட்டு மனைக்காக, ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதரிடம் பணம் கொடுத்து, ஏமாந்தவர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரியும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா என்பவரை கைது செய்யக்கோரியும் புகார் அளித்தனர். ஒரே நேரத்தில்ர, எஸ்பி அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>