மின் இணைப்பு கேட்டு ஆர்டிஓ கார் முற்றுகை: மகள்களுடன் தொழிலாளி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் மின் இணைப்பு கேட்டு, ஆர்டிஓ காரை மறித்து சிறுவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மலை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். சக்திவேல், மலை நகரில் கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, கடந்த 5 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறார். ஆனால், இவர் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என கூறி, அரசு அதிகாரிகள் மின் இணைப்பு வழங்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கலெக்டரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி, வட்டாட்சியர் பர்வதம் ஆகியோர் 2 அரசு கார்களில், மேற்கண்ட பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், அவர்களை வழிமறித்து சக்திவேல் மற்றும் அவரழ 3 குழந்தைகள், கார்களின் முன்னால் திடீரனெ அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,  சக்திவேலிடம், குழந்தைகளை அழைத்து கொண்டு சாலையை விட்டு அகலும்படி கூறினர். மேலும், கோரிக்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனை ஏற்க மறுத்த சக்திவேல், தனது மகள்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு மாற்று வழியாக சென்று விட்டனர்.

இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 250 முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், எங்கள் குழந்தைகள் மின்சார வசதியின்றி படிக்க முடிவதில்லை. இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. எனது குடும்பமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு எங்களுக்கு மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>