காஞ்சிபுரம் அருகே நியுமோகோக்கல் தடுப்பூசி சிறப்பு முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, கலெக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஊக்கத் தவணையாக 9 மாத குழந்தைகளுக்கு அளிக்கப்படவுள்ள நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி தலைமை வசித்தார். எம்எல்ஏ எழிலரசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.  

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து கலெக்டர் மா.ஆர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைகாய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட உள்ளது.  இந்த தடுப்பூசி ஒன்றரை முதல் மூன்றரை மாதம், ஊக்கத் தவணையாக 9வது மாதத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

3 தவணை நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியின் விலை தனியாரிடம் ரூ.12 ஆயிரம். ஆனால் தமிழக அரசு, இதனை இலவசமாக வழங்கியுள்ளது.  நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி திட்டத்தின்படி, ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 15,864 குழந்தைகள் பயனடைய உள்ளனர். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பிபை பயன்படுத்தி நியுமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், சாலவாக்கம் மருத்துவ அலுவலர் கிருஷ்ணா, சுகாதார ஆய்வாளர் கதிர்வேல், செவிலியர் பிரேசில்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: