சென்னையில் தூய்மையை பராமரிக்கும் வகையில் அரசு சுவர்களில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை

* தனியார் சுவரில் உரிமையாளர் அனுமதி அவசியம்

* விரைவில் அறிவிப்பு; மீறினால் நடவடிக்கை

சென்னை: சென்னையில் உள்ள அரசு சுவர்களில் கட்சி விளம்பரம் செய்ய மாநகராட்சி தடை விதித்துள்ளது. சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில்,  மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில்  செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் அமைத்தல் போன்ற  அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும்  மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து  நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. இதனை தடுக்கும் வகையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலோசனையின்படி சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள்,  தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகள் மற்றும்  அரசு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மாநகராட்சி பொறியியல்  மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மாநகராட்சி சார்பில் பேருந்து சாலைகளில் உள்ள தடுப்புகள் மற்றும்  சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் வகையில் சிறப்பு  நடவடிக்கையாக நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் 5  சாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்  முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகின்றன.அதன்படி சென்னையில் உள்ள 15  மண்டலங்களில் கடந்த 22ம் தேதி வரை 9,045 இடங்களில் 67,341 போஸ்டர்கள்  அகற்றப்பட்டு சுவர்களில் வண்ணம் பூசுதல், ஓவியம் வரைதல் போன்ற பணிகள்  நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அரசுக்கு சொந்தமான  சுவர்களில் அரசியல் விளம்பரங்கள், கட்சி சின்னங்கள், கொடிகள் வரைதல்  மற்றும் தலைவர்களின் பெயர்கள் போன்றவை சுவர்களில் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியாருக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரம் செய்ய  வேண்டுமானால் அதன் உரிமையாளர்களிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்.  அவ்வாறு அனுமதி பெறாமல் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுவர்களை  பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, தண்டனை வழங்கப்படும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  மாநகராட்சி சார்பில் விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, தண்டனை வழங்கப்படும்.

Related Stories:

>