தென்னந்தியாவில் முதல் முறையாக வலிப்பு நோயாளியின் நினைவாற்றலை பாதுகாக்கும் சைபர்நைப் சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் பெருமிதம்

சென்னை: நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மென்பொருள் நிபுணராகவும், தடகள விளையாட்டு வீரராகவும் உள்ள தாமஸ் (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2009ம் ஆண்டு அவ்வப்போது உணர்வற்ற மயக்க நிலையாலும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நியூசிலாந்தில் நரம்பியல் நிபுணரிடம் சென்ற அவருக்கு வலிப்பின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெறத் தொடங்கினார். இருப்பினும் கடந்த 2010-15ம் ஆண்டு வரை அவருக்கு வலிப்பின் தாக்கங்கள் அதிகமாக இருந்தன.  இறுதியில் நியூசிலாந்தில் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தின் மூத்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மற்றும் சைபர்நைப் சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கரை அணுகினார். அப்போது விரிவான நரம்பியல் உளவியல் மதிப்பீட்டை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகளின் மூத்த வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் முத்துகனி கூறுகையில், ‘எம்டிஎல்இ என்பது பொதுவான வலிப்பு நோய்களில் ஒன்றாகும். எம்டிஎல்இ மூளையின் டெம்பரஸ் லோபின் உள் பகுதியை பாதிக்கிறது. குறிப்பாக ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியில் நினைவாற்றல் செயல் முறைகள் நடைபெறும் இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மைக்ரோ சர்ஜரி என்பது மருந்து இல்லாமல் எம்டிஎல்இவுக்கு செய்யும் முதல் சிகிச்சை வாய்ப்பாகும். இருப்பினும், அறுவை சிகிச்சை நினைவு திறனுக்கு சில ஆபத்துகளை ஏற்படுத்தும். தாமஸ் தனது நினைவாற்றலை பாதுகாப்பதை முக்கியமாக கருதினார். சைபர்நைப் ரேடியோ சர்ஜரி சிகிச்சை  வலிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து நினைவையும் பாதுகாக்கலாம். சைபர்நைப் என்பது உடலில் ஊடுருவல் அல்லாத சிகிச்சை வாய்ப்பாகும். இது ஒரே அமர்வில் 30 நிமிடத்தில் நிறைவு செய்யப்படுகிறது,’ என்றார்.  

சிகிச்சை குறித்து டாக்டர் சங்கர் கூறுகையில், ‘ரேடியோ சர்ஜரி எனப்படும் கதிரியக்க சிகிச்சை அனைத்து எம்டிஎல்இ நோயாளிகளுக்கும் மேற்கொள்ளப்படுவது இல்லை. உயர்மட்ட செயல்பாடுகள் கொண்ட இளைஞர்கள், சமூக செயல்பாடுகளை கொண்டவர்கள், குறிப்பிட்ட பணி செய்வோர், சிகிச்சைக்கு முன்பு சில நரம்பியல் உளவியல் குறைபாடு கொண்டவர்கள் போன்றோருக்கு மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை முறையுடன் ஒப்பிடும்போது சிறந்த நினைவக பாதுகாப்பை இது வழங்குகிறது. மேலும் தாமஸ்க்கான மருந்து தேவைகள் இப்போது மிகவும் குறைந்த அளவுகளிலேயே உள்ளன. மேலும் புதிய வலிப்பு தாக்கங்கள் எதுவும் இல்லை. அவர் புத்துணர்ச்சியுடனும் நல்ல ஆற்றலுடனும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளார்,’ என்றார்.

Related Stories:

>