பொறியியல் படிப்பில் 5%க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே சேர்கின்றனர்: அதிர்ச்சி தகவல்

சென்னை: பொறியியல் படிப்பில் 5 சதவீதத்திற்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே சேர்வதாகவும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்  12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மாணவர்கள் சேர்க்கையின் போது தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே முன்னணி கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களை அள்ளிச் செல்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில்  உள்ள பாடப்பிரிவுகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு சதவீதம் இடம் கூட பெற முடியாத சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ள புள்ளி விபரங்கள் வெளியாகி மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொறியியல் படிப்பில் 2020-21 ம் கல்வியாண்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விவரம்: அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள  2,420 இடங்களில் 20 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 8 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். அண்ணா பல்கலைக் கழகதத்தின் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 6536 இடங்களில் 338 அரசு பள்ளி மாணவர்களில்  164 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள 3900 இடங்களில் 246 அரசு பள்ளி மாணவர்களில் 103 பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரியில் 2960 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 13 பேரும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 1,97,116 இடங்களில் 12,465 அரசு பள்ளி மாணவர்களும், 6584 பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர்.

பொறியியல் படிப்பில் 2019-20ம் கல்வியாண்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விவரம்: அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள  2420 இடங்களில் 36 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 3 பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். அண்ணாபல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 6550  இடங்களில் 377 அரசு பள்ளி மாணவர்களும், 139  பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள 3900 இடங்களில் 305   அரசு பள்ளி மாணவர்களும், 120  பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிககளாவும் உள்ளனர். அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரியில் 2900  இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 26 பேரும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 2,10,615 இடங்களில் 11,915  அரசு பள்ளி மாணவர்களும்,  5173  பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர்.

அதேபோல் 2018ம் ஆண்டில் 12,954 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் 74 மாணவர்களும், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 544 பேரும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 90 மாணவர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 323 மாணவர்களும், அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகளில் 32 மாணவர்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 11891 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அதேபோல் 2017ம் ஆண்டில் பொறியியல் படிப்பில் 10728 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் 59  மாணவர்களும், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 783  பேரும்,   அரசு பொறியியல் கல்லூரிகளில் 329 மாணவர்களும், அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகளில்41 மாணவர்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் 9516 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் குறைந்த அளவில் சேர்ந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் சமூகப் பொருளாதார நிலைமை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் பொறியியல் படிப்பில் சேர்க்கை குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: