இதுவரை 2,01,54,901 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.நிதி உதவியுடன் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தனியார் மருத்துவமனைகளை சி.எஸ்.ஆர். நிதிக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து இதுவரை  2,01,54,901 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6   கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு 12 கோடி தடுப்பூசிகள்  தேவைப்படுகிறது.  ஆனால் தற்போது 2 கோடி தடுப்பூசி மட்டுமே போட்டு  இருக்கிறோம். மேலும் 10  கோடி தடுப்பூசி இன்னும் வேண்டும். ஜூலை  மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய  அரசு கூறியுள்ளது.  ஆகஸ்ட் மாதம் கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்து  இருக்கிறோம்.  

  மேலும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதேவேளையில் அதிமுக ஆட்சியில் கடந்த மே மாதம் 4ம் தேதி செங்கல்பட்டில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக, அன்றைய முதல்வர் பிரதமருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைப்போல் வேலூர் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததாகவும், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் இல்லை. ஆனால் ஆக்சிஜன் உபகரணங்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: