சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ராஜன்சவுத்திரி மகராஷ்டிரா மாநிலம் தானோ நகருக்கு மாற்றப்பட்டார். சென்னை விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் சுங்கத்துறை ஆணையர்கள் ஒட்டு மொத்தமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையராக ராஜன் சவுத்திரி பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2017, ஜூலை 10ம் தேதி ஆணையராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஆணையராக பதவிவகித்து வருவதால் அவர், மகராஷ்டிரா மாநிலம் தானே நகருக்கு ஜிஎஸ்டி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை.

அதே போல சென்னை விமானநிலைய சுங்கத்துறை அப்பீல் ஆணையராக இருந்த ரவிசெல்வன், சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கார்கோ பிரிவு சுங்கத்துறைக்கு புதிய ஆணையராக, கேரளா மாநிலம் கொச்சி நகரில் ஜிஎஸ்டி ஆணையராக இருக்கும் உதய்பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை ஆணையர்களான பார்த்தீபன், சுதா கோகா, பத்மஸ்ரீ, சீனிவாசநாயக் ஆகிய 4 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய நிதி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 108 சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி ஆணையர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.  அதில் சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பணியில் இருந்த சுங்கத்துறை ஆணையர்களும் ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: