ஆடைகள் கொள்முதல் செய்து 2 கோடி பணமோசடி: தம்பதி கைது

சென்னை: சென்னை ராயபுரத்தில் பிரகாஷ் என்பவர் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பாண்டிச்சேரியைச் சேர்ந்த செந்தில் (எ) மணிகண்டன் மற்றும் அவரது மனைவி விஜய நிர்மலா ஆகியோர் பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி மற்றும் திண்டிவனம் ஆகிய  இடங்களில் துணி கடைகள் நடத்தி வருவதாகவும், கடைகளுக்கு துணிகளை மொத்தமாக சப்ளை செய்யக் கோரி ஆர்டர் கொடுத்ததாகவும் ரூ.1.30 கோடிக்கு ரெடிமேட் ஆடைகளை சப்ளை செய்ததாகவும் துணிகளை பெற்றுக்கொண்டு சிறிய தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.83 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

விசாரணையில் தம்பதி ரெடிமேட் கடை நடத்தி வருவதாக கூறி வாதி மற்றும் 11 நபர்களிடம் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ஜீன்ஸ் மற்றும் ரெடிமேட் ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து அதில் ஒரு சிறிய தொகையை மட்டும்  கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மத்திய குற்றப்பிரிவு, இடிஎஃப்-1 அணி - 2,  காவல் ஆய்வாளர்  தலைமையிலான காவல் குழுவினர் தலைமறைவான தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் (41),விஜய நிர்மலா (41) ஆகியோரை தனிப்படையினர் திண்டிவனத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: