மாநில மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்தையும் புறக்கணிக்கிறது ஒன்றிய அரசு: திமுக எம்.பி திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு ஒன்றிய அரசே காரணம் என திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாடினார். நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மக்களவையில் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டது. இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கமிட்டதால் அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு ஒன்றிய அரசே காரணம். நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒரு பொருட்டாகவே ஒன்றிய அரசு கருதவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒன்றிய அரசு இந்தியில் மட்டுமே அறிக்கை அளித்துள்ளது. இந்தியில் மட்டும் விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியில் மட்டுமே அறிக்கை அளித்தது பற்றி மாநிலங்களவை தலைவரிடம் புகார் கூறினோம். மாநில மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்தையும் ஒன்றிய அரசு புறக்கணித்து விட்டது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; விவசாயிகள் போராட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: