விவசாயிகளை குண்டர்கள் என்று அழைத்த அமைச்சர் மீனாட்சி லேகி ராஜினாமா செய்யணும்..! பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் வலியுறுத்தல்

சண்டிகர்: விவசாயிகளை குண்டர்கள் என்று அழைத்த ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் வலியுறுத்தி உள்ளார். டெல்லியின் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, ஒன்றிய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கருத்து தெரிவிக்கையில், ‘பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட குண்டர்கள்’என்றார். மீனாட்சி லேகியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறுகையில், ‘அமைச்சர் மீனாட்சி லேகியின் கருத்து, விவசாயிகளுக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தின் போது பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடந்தது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் யார் குற்றவாளியோ, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல் தொடர்பாக அமைச்சரின் பேச்சு முற்றிலும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது. விவசாயிகளை இழிவுபடுத்த அமைச்சருக்கோ, பாஜகவுக்கோ உரிமை இல்லை.  எனவே, விவசாயிகளை அவமதித்த ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற பெயரில் அழைத்தனர்’ என்றார்.

Related Stories: