அறிமுகமாகிறது மருந்து பெறும் இயந்திரம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தகவல்
 
பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ATM மையங்கள் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இதே பாணியில் அரசு மருத்துவமனைகளுக்குள் மருந்துகளை வழங்கவும் தமிழக அரசு திட்டத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளியாகவும் ஆயிரக்கணக்கானோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவரை பார்த்துவிட்டு மருந்துகளை வாங்குவதற்குள் பெரும் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

எனவே, இந்த பிரச்னையை தீர்க்கும் நோக்கத்தில், நோயாளிகளின் கால விரயத்தை குறைக்கவே இந்த மருந்து பெறும் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாகவும், பணத்தை செலுத்தினால் மருந்துகள் கிடைக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்க ஆலோசித்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சரி... எப்படி இந்த இயந்திரங்கள் செயல்படும்?

‘பார் கோடுகளுடன் கூடிய மருந்துச் சீட்டுகளை படித்து பார்த்துவிட்டு மருந்துகளை வழங்கும் வகையில் கட்டளைகள் கொண்ட சாஃப்ட்வேர் மூலம் இந்த இயந்திரங்கள் இயங்கும். அதற்காக மருத்துவரையே சந்திக்காமல் மருந்துகளைப் பெற்றுக் கொண்டே இருக்கவும் முடியாது. இதற்கென பிரத்யேகமாகவும், கவனமாகவும் சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை மருந்து சீட்டை எந்திரத்தினுள் புகுத்தினாலோ அல்லது மருத்துவரை பார்க்காமலேயே இருந்தாலோ அவர்களுக்கு எந்திரங்கள் மருந்துகளை வழங்காது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் மருந்து வாங்கியவர்கள் விபரம், வாங்காதவர்கள் விபரம், நோயாளிகளின் நோய் பற்றிய தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ள முடியும். அரசு மருத்துவமனையில் மருந்து பெறும் இடத்தில் இருக்கும் கூட்ட நெரிசல் காரணமாக சிலர் வருவதில்லை.

இந்த புதிய திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் பலரும் அரசு மருத்துவமனையைத் தேடி வரும் சூழல் உண்டாகும். இதன்மூலம் மருந்தாளுநர் பற்றாக்குறையும் சமாளிக்கப்படும். பொதுமக்கள் மருந்து பெறுவதற்கான நடைமுறைச்சிக்கல்களும் குறையும் என்று நம்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

- ஜி.ஸ்ரீவித்யா

× RELATED கோதுமையால் வரும் குழப்பம்