முடிவுக்கு வந்தது உட்கட்சி பூசல்!: பஞ்சாப் காங். தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்பு.. முதலமைச்சர் அமரீந்தர் தேநீர் விருந்திலும் பங்கேற்றார்..!!

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசியதை அடுத்து உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது. சண்டிகரில் பஞ்சாப் பவனில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது இருவரும் கருத்து வேறுபாடுகள் களைந்து உரையாடி கொண்டனர். இதை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்து மாநில தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிதாக நியமிக்கப்பட்ட செயல் தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு சட்டபேரவை தேர்தலை சந்திக்கும் பஞ்சாபில் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் செயல்பாடுகளை கட்சியில் முக்கிய தலைவரான சித்து விமர்சித்து வந்தார். இதனால் மாநிலத்தில் உட்கட்சி பூசல் அதிகரித்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து நவ்ஜோத் கட்சியின் மாநில தலைவராகவும் புதிய செயல் தலைவர்களையும் கட்சி மேலிடம் நியமித்தது. கட்சி தலைமையின் பேச்சுவார்த்தையை அடுத்து சித்து உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட முதலமைச்சர் அமரீந்தர் சிங் முன்வந்திருப்பதால் பஞ்சாப் காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories:

>