பெகாசஸ் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பிரான்ஸைச் சேர்ந்த அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் மக்களவையில் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டது. இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கமிட்டதால் அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>