திறமையை விரயம் செய்ய அவசியமில்லை

நன்றி குங்குமம் தோழி

சின்னத்திரை நடிகை லிஷா எக்லர்ஸ்

எல்லோருக்கும் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அப்படி எளிதில் கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் இவ்வுலகில் கொட்டிக் கிடக்கின்றன. ஒருவரின் வெற்றி அவர் செய்யும் செயலும், அதை நோக்கி அவரின் பயணத்திலிருக்கும் தீவிரம், உண்மை, உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில் அமைகிறது. இது போன்றதொரு வெற்றியினை தன் துறை சார்ந்து பெற்றிருக்கிறார் நடிகை லிஷா எக்லர்ஸ்.

ஐந்து திரைப்படங்களுக்கு மேல் நாயகியா நடித்திருந்தாலும், அதில் கிடைக்காத பேரும் புகழும், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ தொடரின் சௌந்தர்யா கதாபாத்திரத்தின் மூலம் லிஷாவுக்கு கிடைத்துள்ளது. ‘‘சென்னைதான் பிறந்தது வளர்ந்தது எல்லாம். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் சேர்ந்து படிச்சேன். படிக்கும் போதே நிறைய டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு ஜெயிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே நடனம்னா உயிர். ஐந்து வயதிலிருந்தே டி.வியில் ஏதாவது பாட்டு போட்டுக் கொண்டு அதை பார்த்து டான்ஸ் ஆடுவேன்.

சாப்பாடு கூட சாப்பிட மறந்திடுவேன். ஆனால் என்னால், டான்ஸ் இல்லாம இருக்க முடியாது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் கூட நடன நிகழ்ச்சின்னா நான்தான் முதலில் நிற்பேன். நடனம் ஒரு பக்கம் என்றால் உடை அலங்காரம் செய்வதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். என் ஃபிரண்ட் மாடலிங் செய்வா. அவளுக்காக நான் உடை அலங்காரம் செய்து கொடுத்தேன். அப்போது அவள் தான் என்னிடம், ‘நீ ஏன் மாடலிங் பண்ணக் கூடாது’ன்னு கேட்டா. அதுவரை எனக்கு அந்த துறை மேல் ெபரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அவள் தான் மாடலிங் செய்ய ஊக்குவித்தாள்.

நானும் மாடலிங் செய்ய ஆரம்பிச்சேன். மாடலிங் துறையில் கொஞ்சம் பெயர் கிடைத்த போது விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது’’ என்றவர் அதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தோன்ற ஆரம்பித்தார். ‘‘சினிமா பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களால் நடிப்பதற்கு ஆர்வமிருந்தாலும் கூடவே பயமும் இருந்தது. எங்க வீட்டில் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து இருக்காங்க. அதனால் சினிமாவில் நடிப்பதற்கு அவங்க உன் விருப்பம்ன்னு சொல்லிட்டாங்க.  இருந்தாலும் எனக்குள் ஒரு தயக்கம்.

அந்த சமயத்தில் நடிகர் நிதின் சத்யா, ‘நான் ஒரு படத்தில் நடிக்கிறேன், லீட் ரோல் ஒன்னு இருக்கு பண்றியா’ன்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன், காரணம் அவர் என் நண்பர் என்பதால் தைரியமாகப் போய் நடித்தேன். ‘சிரிக்க விடலாமா’ என்ற அந்த படம் 45 நாள் ஷூட் போனது. நிறைய ஸ்டார்களுடன் நடித்தேன். அது சினிமா மீது எனக்குள் இருந்த பயத்தை போக்கியது. இந்த படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இரண்டு படங்களில் நாயகியாக நடித்தேன்.

இதனையடுத்து ராணா ஹீரோவாக நடிக்கும் ‘1945’ என்ற வரலாற்றுப் படத்தில் செகெண்ட் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். தற்போது அந்த படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. நான் நடித்ததில் வெளியான திரைப்படம் சசிக்குமார் சாருக்கு தங்கையாக நடித்த ‘பலே வெள்ளைய தேவா’. இப்படி எட்டு மாதத்தில் ஏழு படங்கள் நடித்திருந்தாலும் வெளியாவதில் தாமதமும், சில படங்கள் வெளியாகாமலும் இருக்கிறது.

ஒரு கட்டத்தில், ‘படம் நடிக்கிறன்னு சொன்ன ஒரு படம் கூட வெளியாகல’ன்னு என் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தாங்க.

இது படம் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைவதை விட மேலும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆறு மாத காலமாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கல. அது எனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டு போகும் போது நீங்க கருப்பா இருக்கீங்கன்னு ஒதுக்குனாங்க. எனக்கே ஒரு கட்டத்துக்கு மேல நாம ராசியில்லாத நடிகையோன்னு தோன்ற ஆரம்பிச்சது’’ என்றவரின் பார்வை சீரியல் பக்கம் திரும்பியுள்ளது.

“படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. சீரியல் நடித்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்கிற மித்(myth) இங்கு சினிமா துறையில் உள்ளது. அதனால் அதை ஆரம்பத்தில் தவிர்த்து வந்தேன். படங்கள் நடித்தது வெளியாகாமல், வீட்டிலேயே ஆறு மாதம் இருந்தாலும் என் எண்ணம் முழுவதும் நடிப்பின் மீதே குவிந்திருந்தது. ஒரு நாள், சரி நமக்கு இனி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு வராதுன்னு முடிவு செய்து, ஆங்கில ஆசிரியர் அல்லது நடிப்பு பள்ளி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது ஒரு போன் வந்தது. ‘சன் டி.வி-யில் இருந்து பேசறோம்.

பிரைம் டைம்ல வர சீரியல் ஒன்றில் லீட் ரோல் நடிக்க உங்களை தேர்வு செய்திருக்கிறோம். ஆடிஷன் வந்து அட்டன் பண்றீங்களான்னு. எந்த ஒரு பதிலும் பேசாமல் உடனே ஓகே சொன்னேன். கூட நடிக்கறவங்க, சின்னத்திரை சூப்பர் ஸ்டார் சஞ்சு, பூர்ணிமா அம்மா, ராஜா சார்’ன்னு சொன்னாங்க. நான் இவர்களை எல்லாம் பார்த்து வளர்ந்தவள். இன்று அவர்களோடே நடிக்கும் வாய்ப்பு தானா வந்திருக்கு. ஏன் தயங்கணும்ன்னு சரின்னு சொல்லிட்டேன்.

சீரியலுக்கு நான் புதுமுகம் என்பதால் எனக்குள் இருந்த பயத்தை ‘கண்மணி’ சீரியலின் இயக்குநர் சிவா சார், ஒளிப்பதிவாளர் ஆனந்த் இருவரும் போக்கினார்கள். இந்த சீரியலில் அப்பா கதாபாத்திரம் உண்மையான அப்பா போலவே இருந்தது. அவர் இறக்குற மாதிரி காட்சியை ஷூட் செய்த போது எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த அளவு ஒன்றி ஒரு குடும்பம் போல் இருக்கிறோம்” என்று கூறும் லிஷா, புதிதாக நடிக்க வரும் நடிகர், நடிகைகளுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.

“இங்கு டிஸ்க்ரேஜ் செய்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது என்க்ரேஜ் பண்ணுபவர்கள் குறைவு. வீட்டில் நமக்கு எவ்வளவு சப்போர்ட்டாக இருந்தாலும், எல்லா விஷயங்களும் அவர்களிடம் பகிர முடியாத துறையாகத்தான் நடிப்பு துறை இன்றும் உள்ளது. இதனால் சில சமயம் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கேன். ஒரு கட்டத்திற்கு பிறகு பிரச்னைகள் எல்லா துறையிலும் தான் இருக்கும். எதையும் கவனத்தில் கொள்ளாமல் நம் வேலையை திறமையாக செய்யணும்னு கத்துக் கொண்டேன்.

சினிமாவில் பல கதாபாத்திரங்கள் இருக்கிறது. இது மட்டும் தான் நடிப்பேன் என்றில்லாமல், நல்ல வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அதை சரியாக செய்தாலே அதற்கான பலன் ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும். நடிப்பில் ஜெயித்தவர்கள் எல்லாரும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லிட முடியாது. திறமையும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். ஒரு காலத்தில் என் நிறத்தால் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்த நிலை இப்போது மாறிவிட்டது. நிறம் பற்றிய தவறான புரிதலை சிலர் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதே சமயம் எனக்கான கதாபாத்திரத்தை நான் சரியாக தேர்வு செய்யவில்லை. எல்லாமே அனுபவத்தினால் தான் கற்றுக் கொண்டேன். யாரையும் நம்பாதீர்கள். நிறையப் பேர் வருவாங்க, காசுக் கொடுங்க அதை பண்றேன் இதை பண்றேன் என்பார்கள். நீங்க என் கூட ஜாலியா உல்லாசமாக இருந்தா உங்களை எங்கேயோ கொண்டு போய் விடுறேன் என்றெல்லாம் சொல்வார்கள். அது ரொம்ப தப்பான தேடல். என்னைப் பொறுத்தவரை நம் திறமையை இது போன்ற ஆட்களிடம் விரயம் செய்ய அவசியமில்லை. திறமையான ஆட்களோடு பயணிப்போம்” என்றார் நடிகை லிஷா எக்லர்ஸ்.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: