12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

சென்னை: 12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் மாணவர்கள் விருப்ப தேர்வு எழுத இயலாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் 10 மற்றும் 11ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களின் மதிப்பெண் பட்டியலானது கடந்த 19ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் அரசு கொடுத்துள்ள பொதுத்தேர்வு மதிப்பெண் போதவில்லை என்று கருதும் மாணவர்கள், தனி தேர்வர்கள், 10 மற்றும் 11ம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்கள் என சுமார் 42,000 பேர் இருக்கின்றனர்.

தொடர்ந்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் போதவில்லை என்று கருதக்கூடிய மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நேற்றைய தினம் தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் இந்த விண்ணப்ப பதிவானது தொடங்கியிருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக செயல்படக்கூடிய சேவை மையங்கள் மூலமாக விருப்ப தேர்வு எழுத மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. மேலும் குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் மாணவர்கள் விருப்ப தேர்வு எழுத இயலாது என்றும் அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுத விண்ணப்பிக்க வேண்டும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 6 முதல் 19ம் தேதி வரை 12ம் வகுப்பு விருப்ப தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

>