வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது

புழல்: செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. இதுபோல் வழிப்பறியில்  ஈடுபடுபவர்களை பிடிக்க மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்பிரிவு எஸ்ஐ அசோக்குமார் தலைமையில் போலீசார் வழிப்பறி ஆசாமிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செங்குன்றம் அடுத்த இந்திரா நகர், புழல் ஏரி கரையில் உள்ள ஒரு வீட்டில், சந்தேகப்படும்படி 2 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு சென்று 2 பேரை, மடக்கி பிடித்தனர். விசாரணையில்,  செங்குன்றம் அடுத்த காந்தி நகர் எம்ஜிஆர் 2வது தெருவை சேர்ந்த சூர்யா (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது. மேலும் விசாரணையில், 2 பேரும், அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 100 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர். சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சி சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் கோபி (29). ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் மதியம் கோபி, ஆட்டோவை செங்குன்றம் நோக்கி ஓட்டி சென்றார். காந்தி நகர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, 4 பேர் ஆட்டோவை மறித்து, கோபியிடம் கத்தியை காட்டி மிரட்டி, கீழே இறக்கினர். பின்னர் ஆட்டோவை கடத்தி சென்றனர்.

புகாரின்படி, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  நல்லூர் 400 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ஷேர் ஆட்டோவை மடக்கி, பிடித்து,  அதில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். அதில், சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்த மதி (28), ஈஸ்வரன் (19), ராஜசேகர் (22), விக்கிரமன் (20) என்றும், கோபியிடம் இருந்து ஆட்டோவை கடத்தியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: