வியாபாரியை வெட்டி செல்போன், பணம் பறிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுகுத்தகை, பவானி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (52). தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். நேற்று முன்தினம் மாலை சுரேஷ், வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, மோரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  அவ்வழியாக ஆட்டோவில் வந்த 7 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷின் தலையில் வெட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர். இதில், படுகாயமடைந்த அவரை,  அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல், பாடியநல்லூர், மொண்டியம்மன் நகர், சுப்பிரமணிய பாரதி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (52). மாநகர போக்குவரத்து கழக டிரைவர். நேற்று முன்தினம் மாலை முனியாண்டி ஆவடி அடுத்த காட்டூரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 7 பேர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, செல்போனை பறித்து சென்றான். மேற்கண்ட சம்பவங்கள் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை, ஐஏஎப் சாலையை சேர்ந்தவர் மகேந்திர சிங் (48). ஆவடி பாதுகாப்பு துறை நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு மகேந்திர சிங் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கினார். நேற்று காலை மகேந்திரசிங் எழுந்து பார்த்தபோது, 2 செல்போன்கள் திருடு தெரிந்தது. புகாரின்படி முத்தா புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜி வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி, மணிமேகலை தெருவை சோர்ந்தவர் பாலாஜி (25)யை கைது செய்தார்.

* ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி (21). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த சில மாதங்களுக்கு முன், பாலாஜிக்கும், அம்பத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முகநூலில் தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மனோஜ், அயப்பாக்கம் வந்து பாலாஜியை சந்தித்தார். பின்னர் அவர், பாலாஜியிடம், தனது பெற்றோர்களை உனக்கு அறிமுகம் செய்கிறேன் என கூறி, மொபட்டில் அழைத்து சென்றார். அம்பத்தூர் ஏரிக்கரை ஓரமாக அழைத்து சென்ற மனோஜ், அங்கு தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலாஜியை மிரட்டி, அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலமாக, மற்றொரு வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்தை அனுப்பினர்.

பின்னர், அவரது செல்போனை பறித்து கொண்டு, இந்த சம்பவத்தை வெளியே கூறினால், முகநூலில் உனது புகைப்படத்தை ஆபாசமாக பதிவு செய்து அவமானப்படுத்தி விடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசில் வழக்குப்பதிவு பாலாஜியிடம் பணம் பறித்தவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: