டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா இன்று தொடக்கம்: பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?

டோக்கியோ: கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி, டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை அள்ளி அசத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  உலகின் மிகப்பெரிய  விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்,   ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை பூதாகரமாக எழுந்ததை அடுத்து போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால்  அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடந்தன.  எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும்,  ஜப்பான் அரசும்  உறுதியாக உள்ளன.

அதற்கு வசதியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த பிரச்னையுமின்றி ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. உலகம் முழவதிலும் இருந்து இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தொடக்கவிழா அணிவகுப்புடன் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்குகிறது.  தொடக்கவிழா நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க,  போட்டிகளை  கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அதனால் போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் நடக்கும். கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  மொத்தம்  11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த  ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.

விழாக்கோலம்

டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் (ஒலிம்பிக் பிரதான அரங்கு) இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ‘ஒலிம்பிக் சுடர்’ ஏற்றும் நிகழ்வுடன் ஒலம்பிக் போட்டி தொடங்குகிறது. ஜப்பான் மன்னர் நாருஹிடோ போட்டியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாரம்பரியப் பெருமையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 119 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். இவர்களோடு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் அடங்கிய பிரமாண்ட இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது.

*  தொ டக்க விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்க உள்ளனர்.

நம்பிக்கை நட்சத்திரங்கள்

இம்முறை இந்திய குழுவினர் 17 பதக்கங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக ஒலிம்பிக் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்துவரும் கிரேஸ்நோட் என்ற நிறுவனம் கணித்துள்ளது. துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், வில்வித்தை போட்டிகளில் பதக்க நம்பிக்கை மிகப் பிரகாசமாக உள்ளது. குறிப்பாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர்  சவுரவ் சவுதாரி இணை தங்கப் பதக்கத்தை முத்தமிடுவது 99.99 சதவீதம் உறுதி என அடித்துச் சொல்லலாம். காரணம், இந்த ஜோடி கடந்த 2 ஆண்டுகளில் 5 உலக கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பதே. இவர்கள் இருவரும் ஆண்கள் மற்றும் மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வெல்வார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

மகளிர் மல்யுத்தம் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத், ஆண்கள் குத்துச்சண்டையில் (52 கி.) அமித் பாங்கல், வில்வித்தையில் தீபிகா குமாரி  அடானு தாஸ் இணை, ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் பூனியா ஆகியோரும் வெற்றிகரமாக பதக்க வேட்டை நடத்துவார்கள் என நம்பலாம்.

இவர்களுடன் பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தனது 2வது ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பளுதூக்குதலில் மீராபாய் சானு, குத்துச்சண்டையில் மேரி கோம், ஆண்கள் ஹாக்கி அணி, தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா, மகளிர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டீ சந்த்… என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜொலிக்கத்தான் செய்கின்றன.

Related Stories: