×

மும்பையின் வானவில்!

நன்றி குங்குமம் தோழி
    
ஓவியர்... சமூக சேவகி... ரபுல் நாகி

மும்பை என்றதும் நம் கண் முன்னால் நிற்பது, அழுக்கேறிய வீடுகள் மற்றும் குப்பை நிறைந்த தெருக்கள். ஆனால் இந்தக் காட்சியினை நாம் மும்பை நகரத்தில் பார்க்க முடியாது. மாறாத அங்குள்ள சேரிகளான தாராவி, ஜாஃபர் பாபா நகர் அல்லது டோபி காஹட் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களை சுற்றிலும் அழுக்காகத்தான் காட்சியளிக்கும். இந்த அழுக்கு படிந்த சேரிகளை ‘மிசால் மும்பை’ என்ற திட்டம் மூலம் வண்ணமயமாக மாற்றி அமைத்துள்ளார் ஓவியர் மற்றும் சமூக சேவகியான ரபுல் நாகி.

எட்டு வருடங்களுக்கு முன் ரபுல், மும்பையை அழகுபடுத்தும் திட்டத்தை தன் கையில் எடுத்தார். அங்குள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் தெருக்களில் மக்கள் இதுநாள் வரை அறிந்திடாத ‘பப்ளிக் ஆர்ட்’டை அறிமுகம் செய்தார். பப்ளிக் ஆர்ட் மூலம் ஒரு காலத்தில் அழுக்கேறி இருந்த மும்பையின் சேரி பகுதிகள் எல்லாம் இப்போது வண்ணமயமான ஹெல்மெட்டுகளை அணிந்திருப்பது போல் காட்சியளிக்கிறது.

‘‘வண்ணங்களால் ஒரு பகுதியை மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களுக்கும் இவை மூலம் ஒரு புதிய அங்கீகாரம் ஏற்படும். அது தாராவி, ஜாஃபர் பாபா நகர் அல்லது டோபி காஹட் எதுவாக இருந்தாலும் கலை மூலம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தர முடியும்’’ என்கிறார் ரபுல் நாகி. ரபுல் நாகி கலா ரசிகர் மட்டுமில்லை மனிதநேயத்தையும் நேசிப்பவர்.

‘‘சேரிகளில் கடந்த எட்டு வருஷமா ஓவியப் பயிற்சி அளித்து வறேன். நான் முதலில் இங்கு காலடி வைத்த போது, இந்த பகுதி இருந்த நிலை மற்றும் மக்கள் வாழும் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று தான் தோன்றியது. அதனால் முதலில் இங்குள்ள சுற்றுப்புறச் சூழலை எப்படி மாற்றி அமைக்கலாம்ன்னு யோசிச்சேன். கலை மூலம் அவர்களின் வாழ்வில் மேலும் மகிழ்ச்சியை கொண்டு வர நினைச்சேன். அப்படி உருவானது தான் ‘மிசால் மும்பை’ திட்டம். இந்த திட்டத்தின் முதல் சேரி தாராவி.

அடுத்து பாந்திராவில் உள்ள ஜாஃபர் பாபா நகரை தொடர்ந்து இதுவரை 13 சேரிகளை வண்ணமயமாக்கி இருக்கேன்’’ என்றார் ரபுல் நாகி.
மெட்ரோபாலிடன் நகரத்தில் என்றுமே பரபரப்பாக இயங்கி வரும் நகரம் மும்பை. இங்கு வாழும் மக்கள் தினம் பல சவால்களை சந்தித்து வருகிறார்கள். ரபுல் நாகி, சேரிகளின் அமைப்பை மாற்றுவது மட்டும் இல்லாமல் மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

நான் சேரியை சீரமைக்க போறேன்னு சொன்னாதும் பலர் எனக்கு அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சாங்க. சேரிக்கா அதுவும் தாராவி போன்ற சேரி மிகவும் அபாயகரமானதுன்னு சொன்னாங்க. நான் அங்கு சென்ற போது எனக்கு அப்படி தெரியவில்லை. பலதரப்பட்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். எல்லாவிதமான மக்கள் அனைத்து இடங்களிலும் வசிக்கிறார்கள். இவர்கள் சேரிகளில் வசித்து வருகிறார்கள் என்பதற்காக வேற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமா?’’ என்ற அனுதாபத்தோடு கேள்வியினை எழுப்புகிறார் ரபுல்.

‘‘முதலில் நான் அங்கு போன போது அவர்களின் நிலத்தை அபகரிக்க வந்துவிட்டதாக நினைத்தனர். பெயின்ட் டப்பாவை எல்லாம் பார்த்திட்டு, ‘பெயின்ட் எல்லாம் வேணாம், குழந்தைகளின் படிப்பு மற்றும் மளிகை  பொருளுக்கு பணம் கொடுங்க’ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்போது நான் வெறும் பெயின்ட் மட்டும் அடிக்கல, உங்கள் வீட்டையும் சீரமைத்து தர போறதாகவும், சுத்தமான கழிப்பறை கட்ட இருப்பதாக சொன்ன பிறகு தான் என் மேல் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அவங்க பயத்தையும் நாம் தவறா சொல்லக்கூடாது.

இங்குள்ள மக்கள் பல பொய்யான வாக்குறுதிகளை சந்தித்துள்ளனர். அது அவர்களுக்கு பழகிவிட்டது. ஆனால் அதை நாம் உண்மையாக செய்ய முன் வரும் போது, மொத்த சேரியுமே எனக்கு தோள் கொடுக்க முன்வந்தது. அதன் பிறகு நான் என் வேலையில் மும்முரமாக இறங்க ஆரம்பிச்சேன்’’ என்ற ரபுல் சேரியில் உள்ள இளைஞர்களையும் ஓவியராக மாற்றியுள்ளார். ‘‘நான் இன்று பெயின்ட் அடிச்சிட்டு போயிடுவேன்.

காலம் முழுதும் அவர்கள் தான் இங்கு வசிக்க போகிறார்கள். அதனால் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமா வைத்துக் கொள்ள தெரியணும். அதை செயல்படுத்த ஒவ்வொரு தெருவிற்கும் மூன்று பேர் இதற்காக நியமிச்சேன். அவர்களிடம் நான் இந்த மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. என் நோக்கம் அவர்களுக்கு புரிந்தது. அதனால் என்னுடன் கை கோர்த்து செயல்பட ஆரம்பித்தனர். தெருவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளணும். குப்பையை குப்பைத்தொட்டியில் போடணும்.

சுவற்றில், தெருவில் துப்பக்கூடாது. இப்படி நிறைய விஷயங்களை திறன் மேம்பாடு பயிற்சி மூலம் மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன். சமூக சேவையை கலையுடன் இணைத்து செய்யும் போது ஏற்படும் மன அமைதிக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை’’ என்றவர் இதன் மூலம் ஒரு முழுமையான அனுபவத்தை உணர்ந்ததாக கூறினார். ‘‘சேரிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கண்காணிப்பது பெரிய சவால். இன்றும் வேர்லி கோலிவாடாவில் வெட்ட வெளியில் தான் மலம் கழிக்கிறார்கள்.

பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் குழுவினரை கொண்டு 16 கழிப்பறைகளை அமைத்திருக்கிறோம். தற்போது 60% மக்களை மாற்றிட்டேன். மீதம் 40% தான். இவர்களையும் மாற்றிடுவேன்’’ என்றார் நம்பிக்கையுடன். ‘‘நானும் சேவை செய்றேன்னு, இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அடிக்கல. முதலில் தாராவியில் உள்ள சில வீடுகளின் அமைப்பை வரைந்து கொள்வேன். அதன் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் என்ன கலர் காம்பினேஷன் கொடுக்கலாம் என்று திட்டமிடுவேன். அதன் பிறகு தான் அங்கு சென்று வண்ணம் தீட்டுவேன்.

நான் பயன்படுத்தும் வண்ணம் எல்லாம் தரமானவை. குறைந்த பட்சம் நான்கு வருடம் வரை நிறம் மங்காமல் இருக்கும். ஒவ்வொரு சுவரிலும் ஒரு உயிரோட்டம் இருக்கணும். அப்போது தான் தூரத்தில் இருந்து பார்க்கும் போது பலவிதமான நிறங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கலை வசதி படைத்தவர்களுக்கானது மட்டுமல்ல எல்லாத் தரப்பு மக்களையும் மகிழ்விப்பது தான் ‘பப்ளிக் ஆர்ட்’. கலைஞனுக்கு வயது ஒரு தடை கிடையாது. 80 வயதானாலும் கலைஞனால் மட்டுமே முழு ஈடுபாட்டோடு வேலை பார்க்க முடியும்’’ என்றார் ரபுல் நாகி.

தொகுப்பு: ஷம்ரிதி

Tags : Mumbai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...