பிடிவாதம் திடீரென தளர்ந்தது முதல்வர் பதவியில் இருந்து விலக எடியூரப்பா சம்மதம்: கர்நாடகாவில் 25ம் தேதி தலைமை மாற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு செய்யும் நிலையில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜ ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உட்கட்சி பூசல் காரணமாக வரும்  26ம் தேதி எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் நேற்று எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘நான் தேசிய கட்சியில் இருப்பவன். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நானே முதல்வராகவில்லை. கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்ததால் முதல்வராகி உள்ளேன்.

கட்சி தலைமை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டால் செய்வேன். கட்சி கொள்கையின்படி 75 வயது நிரம்பியவர்கள் பதவியில் இருக்கக் கூடாது. எனக்கு 77 வயது முடிந்தும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் என் மீது மதிப்பும், மரியாதையும் வைத்து வாய்ப்பு வழங்கியுள்ளனர். கட்சி மேலிடம் வரும் 25ம் தேதி ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிட உள்ளது. அதில் என்ன அம்சம் இருக்கும் என்று தெரியாது. கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன்,’’ என்றார். இதன்மூலம், நாளை மறுதினம் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

Related Stories:

>