டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள்: பதக்க வேட்டைக்கு தயார்..! டோக்கியோவில் நாளை மாலை துவக்க விழா

டோக்கியோ: கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் 2020 போட்டிகள், அறிவிக்கப்பட்டபடி நாளை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்குகின்றன. 206 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 11 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள இந்த ஒலிம்பிக் திருவிழாவின் துவக்க விழா, இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு, டோக்கியோவின் நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் துவக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 32வது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவின் கோரதாண்டவத்தால், உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக் உட்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டு, 2021ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆக.8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டபடி நாளை முதல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. துவக்க விழா, டோக்கியோவின் நேஷனல் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். கொரோனா அச்சம் காரணமாக துவக்க விழாவில், வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாடு சார்பிலும் 7 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் பார்வையாளர்களாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உட்பட ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் மன்னர் நாருஹிடோ, துவக்கி வைக்கிறார்.  துவக்க விழா நாளை மாலை நடைபெற உள்ள நிலையில், நாளை அதற்கு முன்னதாகவே வில்வித்தை மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. வில்வித்தை போட்டிகள் இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கும், குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-தென் கொரியா இடையேயான கால்பந்து போட்டி, நாளை மதியம் 1.30 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கியில் 8 தங்கம்: இந்தியா சாதனை

ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ஹாக்கியில், இந்திய அணியே இதுவரை அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. ஹாக்கியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய அணி, மொத்தம் 11 பதக்கங்களை குவித்துள்ளது. அடுத்தபடியாக 3 தங்கப்பதக்கங்களுடன், மொத்தம் 8 பதக்கங்களை வென்று, பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்தியா தனது முதலாவது போட்டியில் வரும் 24ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு டோக்கியோவில் உள்ள தெற்கு பிட்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories: