×

ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள் செல்போன் ஒட்டுக்கேட்பு நாடாளுமன்ற நிலைக்குழு 28ல் விசாரணை: உள்துறை, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளுக்கு சம்மன்

புதுடெல்லி: பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலமாக காங்கிரஸ் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்ேபான்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்போது, உள்துறை, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலமாக இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவர்களின் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகவும் திடுக்கிடும் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றன. குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது, இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் சர்வதேச சதிச்செயல் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையிலும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உண்மையை வெளிப்படுத்தும் வரை ஓயமாட்டோம் என அனைத்து எதிர்க்கட்சிகளும் திட்டவட்டமாக கூறி உள்ளன.இந்நிலையில், பெகாசஸ் ஒட்டு கேட்டு விவகாரம் குறித்த உண்மையை கண்டறிய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், குடிமக்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை, தகவல் தொடர்பு துறை ஆகிய அமைச்சக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன், கடந்த 2019ம் ஆண்டே சசிதரூர் தலைமையில் எம்பிக்கள் குழு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்த சில குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வலியுறுத்தினர். ஆனால், அதற்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரிக்கப்படவில்லை.

பெகாசஸ் விவகாரம் குறித்து காங். எம்பி சசிதரூர் அளித்த பேட்டியில், ‘‘பெகாசஸ் உளவு மென்பொருள் அரசாங்களுக்கு மட்டுமே விற்கப்படும் மென்பொருளாகும். இது எந்தெந்த நாட்டு அரசுகளுக்கு விற்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய கேள்வி. இந்த மென்பொருளை வாங்கவில்லை என ஒன்றிய அரசு கூறுகிறது. அப்படியெனில் வேறு எந்த நாடு உளவு பார்த்துள்ளது? இது தேச பாதுகாப்பில் கவலை அளிக்கும் தீவிர பிரச்னையாகும். இந்த விஷயத்தில் அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்,’’ என்றார்.

பாஜவுக்கு எதிராக ஒன்றிணையுங்கள்
மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தையொட்டி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேசினார். அப்போது அவர், ‘‘ஜனநாயகத்தை காக்கும் மீடியா, நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூன்று தூண்களையும் பெகாசஸ் கைப்பற்றி உள்ளது. வரும் 27,28ம் தேதி டெல்லி செல்கிறேன். அங்குள்ள எந்த தலைவருடனும் நான் நிம்மதியாக போனில் பேசக் கூட முடியவில்லை. 2024 தேர்தல் வரை காத்திருக்கக் கூடாது. இப்போதே பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும்,’’ என்றார்.

ஒன்றிய அரசு பதில் தர வேண்டும்
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறுகையில், ‘‘பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தவில்லை என ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்றார்.

செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, தனது செல்போனுக்கு மம்தா பானர்ஜி பிளாஸ்டிக் டேப்புகளை ஓட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இதை காட்டி பேசிய அவர், இதேபோல் ஒன்றிய பாஜ அரசுக்கும் ‘டேப்’ ஓட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

Tags : Union Ministers ,Parliamentary Standing Committee ,Home and Information Technology Department , Union ministers, judges cell phone tapping, parliamentary standing committee, investigation
× RELATED பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்ப்பு...