கொசுக்கள் படையெடுப்பா? போரிடுவோம்! அலெக்சாண்டரையே கொன்றது கொசுதான்

பருவமழை தொடங்குவதற்கான காலக்கட்டத்தை எட்டிவிட்டோம். மழையின் உடனடி விளைவு கொசு. மனிதகுலம் தோன்றியதிலிருந்தே இந்த உயிரினத்தோடு போராடி போராடி தோற்றுக் கொண்டுதான் இருக்கிறது. காலம் காலமாக புதுப்புது ‘கொசு விரட்டி’ ஆயுதங்களுடன் கொசுக்களை ஒழிப்பதற்காக மனித குலம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது.  கொசுக்களும் அயராமல் தங்களால் முடிந்த புதுப்புது நோய்களை மனிதர்கள் மேல் ஏவியபடி இருக்கின்றன. போர் முடிவுக்கு வராமல் அன்றாடம் தொடர்ந்தபடி இருக்கிறது.

சின்னஞ்சிறு கொசு நம்மை என்ன செய்ய முடியுமென நினைக்க வேண்டாம். உலகையே தன் வீரத்தால் மிரளவைத்த மாவீரர் அலெக்ஸாண்டர் போரிலோ அல்லது எதிரிகளால் கொல்லப்பட்டோ இறக்கவில்லை. கொசுக்கடியால் ஏற்படும் ‘வெஸ்ட் நைல் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார் என்கிறது வரலாறு. அவர் மரணம் குறித்து 2003ல் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே வெளியாகி, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக, அலெக்ஸாண்டரின் உயிரே ஒரு கொசுவின் கையில்தான் இருந்திருக்கிறது.

எளிதில் அழிக்க முடியாத ஓர் உயிரினம் கொசு. உலகில் வேறு எந்த மிருகத்தாலும் மனிதனுக்கு ஏற்படும் மரணங்களைவிட கொசுக்களால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். டெங்கு, மலேரியா, மஞ்சள் ஜுரம், மூளைக்காய்ச்சல் என்று ஏற்படுத்தி மொத்த மொத்தமாக மனித உயிரை வாங்கிவிடுகிறது. ஒரு கொசுவால் நூறு பேருக்கு மேல் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாற்பத்தைந்து வினாடிகளுக்கும் ஒரு குழந்தை

மலேரியாவால் இறக்கிறதாம்.

கொசுக்களை தவிர்க்க முடியாது. தடுக்க முடியும். கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவலாம்.

*அதிகாலையும் அந்தியும் கொசுக்கள் மனிதர்களைத் தேடி உற்சாகமாக வரும் பொழுதுகள். இந்த நேரங்களில் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு வீட்டுக்குள் இருப்பது நலம். கொசுக்கள் வளர தண்ணீர் அவசியம் தேவை... வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில், முற்றத்தில், செல்லப் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில், சாக்கடையில், குழாயடியில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

*கொசுக்கடியிலிருந்து தப்ப தொளதொளவென்றிருக்கும், வெளிர் நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். முழுக்கை சட்டை, பேன்ட் அணிந்திருப்பது நலம். கொசுக்கடிக்கு பயந்து, சிலர் சாக்ஸ்களையும் கையுறைகளையும் அணிந்து கொள்வதும் உண்டு.

*கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாற்றாக, கொசு விரட்டி மட்டைகளைப் பயன்படுத்தலாம். உறங்கும்போது கொசுவலை பயன்படுத்தலாம். ஜன்னல் வழியே கொசு வராமல் இருக்க, ஜன்னல் வலைகளை பொருத்திக் கொள்ளலாம்.

*வீட்டுக்கு அருகே சாமந்திப்பூ செடியை வளர்ப்பது நல்ல பலன் தரும். இந்தப் பூவின் வாசனை கொசுக்களுக்குப் பிடிப்பதில்லை... அதனால் நம்மை நெருங்காது.

*உங்களுக்குப் பின்னால் டேபிள் ஃபேனை நெருக்கமாக வைத்து முழு வேகத்தில் ஓடவிட்டால் கொசுக்கள் அண்டாது.

*வீட்டுத் தோட்டத்தில் தும்பி வளர்த்தால் கொசுக்கள் வராது என்று கண்டு

பிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

*உடலில் லவங்கப்பட்டை எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எனப்படும் நீலகிரித் தைலத்தைத் தடவிக் கொண்டாலும் கொசுக்கள் விலகும்... பக்க விளைவுகள் இல்லை.

- யுவகிருஷ்ணா

Related Stories:

More
>