×

இந்த கொடுமையை கேளுங்க!

நன்றி குங்குமம் தோழி

திருமணம் செய்துகொண்டு, சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ, வந்து கூட்டிப்போறேன் என வெளிநாடுகளுக்கு ‘எஸ்கேப்’ ஆகி பிறகு வராமலே இருந்துவிடும் என்.ஆர்.ஐ. நபர்களிடம் ஏமாந்து காத்திருக்கும் பெண்களை `Honey moon brides’ என அழைக்கின்றனர்.
இப்படி ஏமாந்து, நிரந்தரமாய் காத்திருக்கும் பெண்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ரொம்ப அதிகம். இதில் பஞ்சாபில் மட்டும் இப்படி 32000 பெண்களுக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலருக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கும். புதிதாக நடக்கும் திருமணத்தின் மூலம் வரதட்சணையாக கிடைக்கும் தொகையை, பிசினஸில் போட்டுவிட்டு, வேலை பார்க்கும் நாட்டிற்கு எஸ்கேப் ஆகிவிடுவார்கள் இந்த சிகாமணிகள். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து ‘கைவிடப்பட்ட பெண்கள் அமைப்பு’ (Abandoned Brides by NRI Husbamds Internationally) என்ற பெயரில் அமைப்பினை துவங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம், மத்திய அரசு ஒரு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, திருமணம் செய்து விட்டு, மனைவியை கைவிட்டு வெளிநாட்டுக்கு விட்டுச் செல்லும் கணவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அது சட்டமாக்கப்படவில்லை. இருந்தாலும் பஞ்சாப், ஹரியானாவில் இந்த விஷயம் ஒரு தொல்லையாக மாறியுள்ளதால் இப்போது சண்டிகர் பாஸ்போர்ட் நிறுவனம் மனைவியை கை விட்டு விட்டு ஓடிய 370 கணவர்களின் பாஸ்போர்ட்டுகளை தற்காலிகமாக நீக்கியுள்ளது. 21 பேரின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் கைவிட்டுச்சென்ற 52 என்.ஆர்.ஐ. கணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.

எங்கு திருமணம் செய்தாலும், ஒரே மாதத்தில் அதனை பதிவு செய்ய வேண்டும். ஆனால் நம்மில் பலர் அதை அலட்சியமாக விட்டு
விடுகின்றனர். அது தான் பல பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்தாலும் அதற்கான வழக்கு அதிக நாட்கள் நீடிக்கிறது. தீர்க்கமான முடிவுகளும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து காவல்நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை.

இதனால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படாமல் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விட்டுச் சென்ற கணவன்மார்கள் வேலைப் பார்க்கும் நாடுகளுக்கு அவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி, அவர்களை வேலையை விட்டு நீக்கவும், இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

ஆனால் இதில் அவர்கள் குறித்த விவரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதனை எளிதாக செயல்படுத்த முடியும். இதற்கு அடுத்த நடவடிக்கையாக கைவிட்டுச் சென்ற கணவர்கள் வேலை பார்க்கும் நாடுகளுக்கே, இவர்கள் பற்றிய தகவல்களை அனுப்பி, அவர்களை வேலையை விட்டு நீக்கி, இந்தியாவுக்கு திரும்ப அனுப்பும் செயல்பாடுகளையும் துரிதப்படுத்த உள்ளனர். பெண் பாவம் பொல்லாதது. இதை ஆண்கள் புரிந்துகொண்டால் சரி...!

தொகுப்பு: ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரூ.

Tags :
× RELATED வேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை...