×

பெண் குழந்தைகள் பிறக்காத கிராமம்

நன்றி குங்குமம் தோழி

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்குள்ள உத்திரகாசி மாவட்டத்திற்கு உட்பட்ட 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற சமீபத்திய செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 216. அவற்றில் அத்தனை குழந்தைகளும் ஆண் குழந்தைகளாகவே பிறந்திருக்க, ஒரு பெண் குழந்தை கூடப் பிறக்கவில்லை என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தச் செய்திக்குப் பிறகு, இந்த கிராமங்களில் பெண் குழந்தையைக் கருவிலேயே அழிக்கும் செயல் நடைபெறுகிறதா என தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு அபாயகரமான நிலை. ஒரு குழந்தை என்ற அடிப்படையில் குடும்ப அமைப்பு மேலும் சுருங்குவதால், இதன் விளைவு இப்போது வெளிப்படுகிறதோ இல்லையோ இதன் தாக்கம் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நிச்சயம் பெரிய அளவில் வெளிப்படும்.
இந்தியாவில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் சமத்துவம் இல்லாத சில பகுதிகளை ‘ரெட் இன்டிகேட்டர்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் என, ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. பிறகு அதுவே 943 ஆக மேலும் குறைந்தது.  சுகாதாரம் அமைப்பின் சமீபத்திய கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கையும் 900க்கு கீழ் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆண்களுக்குத் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத நிலையே நிதர்சனம். ஒற்றைக் குழந்தை என்பதை வலியுறுத்தி குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்திய மாநிலங்களில் இந்தச் சிக்கல் மேலும் வலுவாக இருக்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடந்திருப்பதாகத் தெரிய வருகிறது.

கடலூர் மாவட்டத்தில்  1000 ஆண்களுக்கு 878 பெண்களும், அரியலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 860 பெண்கள் என்கிற விகிதத்தில், பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்திருப்பதாக  செய்தி வெளியானது. பாலின சமத்துவப் புரிதல் என்பது நம் சமூகத்தில் பரவலாக இல்லை. பெண் குழந்தை என்றாலே பெண்ணைத் திருமணம் செய்துவைக்க ஆகும் செலவு,  பாதுகாப்பாக வளர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள் என பெரும்பாலான பெற்றோர்களால் பெண் குழந்தை பெற்றுக்கொள்வதில் இவை முதன்மைப்படுத்தப்பட்டு, அதுவே பெண் சிசுக் கொலை, கருக்கலைப்பு எனும் பெயரில் இலைமறை காயாக ஆங்காங்கே நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். அவர்களின் விருப்பங்களை அவர்களாகவே நிறைவேற்றிக்கொள்ள சுதந்திரமும், வாய்ப்பும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், முற்போக்குவாதிகள் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், பின்தங்கிய மாவட்டங்களிலும், அதன் கிராமப்புறப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்னும் விழிப்புணர்வற்றவர்களாக, பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் செயலில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சில தனியார் ஸ்கேன் சென்டர்களும், மருத்துவமனைகளும் அதிகமான பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கொடூரமான செயலுக்கு துணை போகின்றன. சமீபத்தில் நாம் சந்தித்த  பெண் ஒருவர் முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியில் மூன்றாவதாகக் கருவுற்றிருந்தார். அவரின் முதல் பெண் குழந்தைக்கே வயது 14 இருக்கும். அவரிடம் விசாரித்தபோது ஆண் குழந்தை வேண்டுமென தன் கணவர் விரும்புவதாகத் தெரிவித்தார்.

அடுத்து பிறப்பதும் பெண் குழந்தையாக இருந்தால் என்ற நம் கேள்விக்கு, அவர் தந்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. குறிப்பிட்ட
மருத்துவமனையில் சொல்லும் ஸ்கேன் நிறுவனத்தில் ஸ்கேன் செய்து எடுத்துக்கொண்டு வந்து தர வேண்டுமாம். அவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டை மூடி சீல் வைத்து கொடுத்துவிடுவார்களாம். அதை மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே பிரித்துப் பார்க்குமாம். பெற்றோர் எதிர்பார்க்கும் குழந்தை இல்லையென்றால் குறிப்பிட்ட அந்த மருத்துவமனை குழந்தையை கலைத்து விடுவார்கள் என்ற தகவலைத் தெரிவித்தார்.

எந்த ஒரு விசயமும் பெரிய அளவில் பிரச்சனையாக நடந்து முடிந்த பிறகு நடவடிக்கை எடுத்தல் என்பதே இங்குள்ள நிலை. ஸ்கேன் சென்டர்களையும், மருத்துவமனைகளையும் அரசு முறையாகக் கண்காணிக்கின்றதா என்ற கேள்வி எழாமல் இல்லை. கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியவந்தால், அதைக் கருக்கலைப்பு செய்வதைத் தடுக்கும் சட்டம் 1992 ல் உருவாக்கப்பட்டது.  

‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து, அதற்கு 252 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி, இதில் 170 கோடி ரூபாய்  நிதியினை விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளது. ஆனால் “பாலின விகித தரவுகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை கேள்வி எழுப்புகின்றன. பெண் சிசுக்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது என்பதை இந்த  எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளும் அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இந்த 132 கிராமங்களிலும் எந்தப் பெண் குழந்தையும் பிறக்கவில்லை என்பது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இந்த மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை நடப்பதையே இந்த புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுகிறது’’ என சமூக ஆர்வலர் கல்பனா தாக்கூர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்த நிலையினை முடிவுக்குக் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மூத்த பத்திரிகையாளர் சிவ் சிங் தன்வால் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஆஷிஷ் பெண் குழந்தைகள் பிறக்காத கிராமத்தை கணக்கெடுத்து கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் வெளியிட்ட தரவின் உண்மைத் தன்மையை 82 கிராமங்களில் பரிசோதிப்பதற்காக பணியில் 26 அதிகாரிகள் தற்போது
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என பெண்கள் பல துறைகளிலும் கால்பதித்து வரும் நிலையில், ஆணோ பெண்ணோ பிறக்கும் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருத்தல் வேண்டும்.

தொகுப்பு: மகேஸ்வரி

Tags : Village ,
× RELATED பெரம்பூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மயான கொட்டகை