×

செஸ் விளையாட்டில் ராணி

நன்றி குங்குமம் தோழி

ஜெனித்தா ஆண்டோ

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ  தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

19-வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டிகள் சுலோவாக்கியா நாட்டில் உள்ள ரூசோம்பர்க் நகரில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 13 நாடுகளை சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஜெனித்தா ஆண்டோ, இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

ஜெனித்தா சர்வதேச போட்டிகளில் வெல்லும் 6-வது தங்கம் இது. தொடர்ந்து 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இவர். திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோவிடம் பேசியபோது…

‘‘எனது அப்பா பெயர் காணிக்கை இருதயராஜ். அவர் ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். எனக்கு 3 வயது இருக்கும்போது நான் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்கும் சக்தியை இழந்தேன். இதனால் 8ம் வகுப்புவரை மட்டுமே என்னால் பள்ளிக்குச் சென்று படிக்க முடிந்தது. பத்தாம் வகுப்பு, +2, பி.காம் எல்லாம் அஞ்சல் வழியில் தொலைதூரக் கல்வியில் இணைந்துதான் படிக்க முடிந்தது.

பத்து வயது இருக்கும்போது என் பெற்றோர் எனக்கு ஒரு ஆபரேஷன் செய்தார்கள். அது எனக்கு வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் தொடர்ந்து இப்போதுவரை பிஸியோதெரபி எடுக்குறேன். நான் பயிற்சி எடுக்க எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு செஸ் விளையாடச் சென்றாலும் என் அப்பா எனக்குத் துணையாக வருவார்.

அப்பா செஸ் விளையாடுவதில் வல்லவர். நான் 3ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அப்பா செஸ் விளையாட கற்றுக் கொடுத்தார். அப்படியே இந்த விளையாட்டில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. மூன்றே மாதத்தில் திருச்சியில் நடைபெற்ற பிரைமரி லெவல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். அது எனக்கு நம்பிக்கையை விதைத்தது.

பிறகு தொடர்ந்து நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் விளையாடி
தேர்வானேன். தொடர்ந்து தேசியப் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதை விடாமல் பற்றிக் கொண்டேன். துவக்கத்தில் விளையாடியபோது, மாற்றுத் திறனாளிகள் பிரிவு என்றில்லாமல் எல்லாப் பிரிவினரோடும் விளையாடத் தொடங்கினேன். 2011ல் முதல் ஐ.பி.சி. போட்டிகள் போலந்து நாட்டில் நடைபெற்றது.

அதில் ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று சில்வர் மெடல் வாங்கினேன். அதன் பிறகு 2013ல் நடைபெற்ற போட்டியில் எனக்கு தங்கம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2014, 2015, 2016, 2017 என தொடர்ந்து ஐந்து ஆண்டுகளும் தங்கம் வென்று முதலிடத்தில் இருக்கிறேன். மீண்டும் இந்த வருடம் 2019ல் எனக்கு தங்கம் கிடைத்திருக்கிறது. ஐ.பி.சி. போட்டிகளில் இதுவரை 9 முறை வென்று முதலிடத்தில் இருந்த ரஷ்ய விளையாட்டு வீரர் அபிஷித்தையும், 5 முறை வென்று முதலிடத்தில் இருந்த இஸ்ரேல் விளையாட்டு வீரரையும் ஒரே டோர்னமெண்டில் வென்று முன்னேறினேன்.

சர்வதேச செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் என்னை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டினார். சென்ற ஆண்டு நிகழ்ந்த பாரா ஏசியன் விளையாட்டில் முதல் முறையாக செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதிலும் பங்கேற்று ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வாங்கினேன்’’ என்கிறார் இந்த நம்பிக்கை நாயகி. தனிநபர் பிரிவு, ரேபிட் பிரிவு என அனைத்திலும் வெற்றி முகம்தான் இவருக்கு.

‘‘தொடர்ந்து தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை பயிற்சி எடுக்கிறேன். செஸ் என்பது முழுக்க முழுக்க மூளை தொடர்பானது. என்றாலும் சாதாரணமாக செயல்படுபவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்ய அவ்வப்போது எழுந்து வெளியில் செல்வார்கள். மாற்றுத் திறனாளிகளான எங்களால் அது சுத்தமாக முடியாது. 4 மணி நேரம் என்றாலும் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும். இடையில் உணவு, தண்ணீர் குடிப்பதுகூடக் கடினம்.

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கழிப்பறை வசதிகள் பெரும்பாலும் எங்களுக்கு ஏற்ற நிலையில் இருக்காது. இது மிகப் பெரும் பிரச்சனை. ஆனால் இதை யாரும் பெரிதாக உணர்வதில்லை. போட்டிகளில் பங்கேற்கும் நாட்களில் காலையில் அருந்தும் தண்ணீர்
மட்டும்தான். போட்டி முடியும் வரை அதிகம் தண்ணீர் குடிக்காமல் கட்டுப்படுத்திக் கொள்வேன். சாதிக்க வேண்டும் என  நினைத்தால் எந்தத் தடையும் தூசிதான். அதற்கு தன்னம்பிக்கை அவசியம்’’ என முடித்தார் ராஜாவுக்கு செக் வைக்கும் இந்த செஸ் ராணி.

தொகுப்பு: மகேஸ்வரி

Tags : Queen ,chess game ,
× RELATED கொரோனா பாதிப்பிலிருந்து வென்று...