அண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்!

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் ஒரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் அந்த மாணவர் மட்டும் பள்ளி விட்ட அடுத்த நிமிடம் நீச்சல் குளத்தில் மிதப்பதை பார்க்கலாம். முன்னோக்கி நீந்துவது, பின்னோக்கி நீந்துவது, தொடர் நீச்சல் என நீச்சலில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் அசத்தி வருகிறான் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மோஹித் குமார்.

‘`அப்போது எனக்கு 7 வயது. சென்னையில் உள்ள ஒரு நீச்சல் குளத்திற்கு அண்ணனுடன் சென்றிருந்தேன். திடீரென நீச்சல் குளத்தில் குதித்த அண்ணன் கைகால்களை உதறியபடி நீரில் தத்தளித்தான். நான் பயத்தில் அலறிட்டேன். சற்று நேரத்தில் நீரில் இருந்து மேலே அவன் வந்ததை பார்த்த பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது. பயத்தில் இருந்த என்னை அண்ணன் சமாதானப்படுத்தி, ‘‘பயப்படாதே, இது நீச்சல் பயிற்சிதான். நீரில் குதித்ததும் நம் கைகளால் தண்ணீரை நம் உடம்பை நோக்கி இழுக்க வேண்டும். காலை  டப் டப்  என்று அடிக்க வேண்டும்.

அப்போது நாம் முன்னோக்கி தள்ளப்படுவோம். நீரில் மூழ்க மாட்டோம். முடிந்தளவு நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை குடிக்காதபடி வாயை மூடிக்கொள்ளவேண்டும். காதில் தண்ணீர் நுழையாத அளவுக்கு நீச்சல் உடையை அணிந்து கொண்டு நீரில் செய்யும் ஒரு உடற்பயிற்சிதான் நீச்சல்’’ என என்  அண்ணன் அளித்த விளக்கம்தான் என்னை நீச்சல் வீரனாக மாற்றியது. இப்போது கூட பெங்களூரில் நடைபெறும் நீச்சல் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார் மோஹித்.

 

‘‘என் அண்ணன் தான் எனக்கு நீச்சலில் முன்னோடி. அன்று அவனுடன் நான் நீச்சல் குளத்திற்கு செல்லாமல் இருந்து இருந்தால், இத்தனை பதக்கங்களும், பரிசுகளும் எங்க வீட்டை அலங்கரித்து இருக்காது... பெற்றிருந்து இருக்க முடியாது. தற்போது தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளேன். இதற்கு என் பயிற்சியாளர் வீரபத்திரன் மற்றும் பள்ளி முதல்வர் சண்முகநாதன் சார் ஆகியோருக்கு நான் மிக கடமைப்பட்டு இருக்கேன். மாநில சப் ஜூனியர் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். ஜூனியர் பிரிவில் SGFI மற்றும் SFI  பிரிவு நீச்சல் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று இருக்கேன்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய SGFI போட்டியில் 4x100 மீட்டர் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளேன். புனேவில் khelo இந்தியா தொடர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி வென்றேன். 50 மீட்டர் தூரம் பின்னோக்கி நீந்தும் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்று 28.50 நிமிடத்தில் பந்தய தூரத்தை நீந்திக்கடந்தேன். இதற்காக வெள்ளிப் பதக்கம் எனக்கு கிடைத்ததுடன் மாநில அளவிலான சாதனையாகவும் அது எனக்கு பெருமை சேர்த்தது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்திய மாணவர் கூட்டமைப்பு நடத்திய 4x100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். இந்தாண்டு 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளேன். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான

50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 2வது இடம் பெற்றதற்காக ரூ.75,000க்கான காசோலையும் வென்றேன். உலக நீச்சல் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்’’ என்றார் மோஹித் குமார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: