நம்மால் முடிந்ததை செய்வோம்!

நன்றி குங்குமம் தோழி

‘மாறும் மாறும் எல்லாமே மாறும் மாறும் என்ற சொல்லைத் தவிர எல்லாமே மாறும்...’’இன்று மனிதனைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது தொழில்நுட்பம். இதில், பெண்கள் தங்களது தனித் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம், ஆன்லைன் பிசினஸ் செய்வது, தனது தனித் திறமைகளை வெளிப்படுத்துவது என முன்னேறி வருகின்றனர். இவ்வாறாகத்தான் கற்றதையும் தனக்குத் தெரிந்தவற்றையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தைகள், பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் ஏஞ்சலினா பிரின்ஸ்.

‘‘சொந்த ஊர் வேலூர். அங்குதான் படித்தது, வளர்ந்ததெல்லாம். சின்ன வயதிலிருந்தே மெடிக்கல் லைன் பற்றி தெரிந்து கொள்வதில் ரொம்ப ஆர்வம். பள்ளிப்படிப்பை முடித்ததும் ‘ஹேண்ட் தெரபி’ கோர்ஸ் டிப்ளமோ பண்ணி னேன். படிக்கும்போதே நிறைய பேருக்கு அன்றாட சிகிச்சை அளித்து வந்தேன். அங்கு புதிய உலகத்தைக் கண்டேன். இங்கிருந்துதான் மக்களோடு மக்களாய் வேலைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.

திருமணத்திற்குப் பிறகு சென்னை வந்த என்னை மேற்கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படிக்க வைத்தது என் கணவர். அங்கு சமூக சேவை படிக்கும் போது உளவியலால் பாதிக்கப்பட்ட நபர்களோடு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுடன் வேலை பார்ப்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், இவர்களை நம்மால் முடிந்த வரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளித்து நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய எண்ணம்’’ என்கிறார் ஏஞ்சலினா.

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சுகாதாரத்தை எவ்வாறு பேணுவது, வருவதற்கு முன்னும் பின்னும் உடலளவில் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வு அறிவது அவசியம் என்று கூறும் ஏஞ்சலினா, “முதலில் பெண்களுக்கு ‘மென்சுரேஷன்’ பற்றிய விழிப்புணர்வை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலிருந்து தொடங்கினேன்.

இதையடுத்து கல்லூரிகள், பள்ளிகள், நிறுவனங்கள் எனத் தொடர்ந்தது. மனித உருவ பொம்மைகளை வைத்து பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். ஆனால், நான் அதைக் கொஞ்சம் வித்தியாசமாகக் காலில் அணியும் சாக்ஸ் வைத்து, அதற்கு உருவம் கொடுத்து அதன் மூலம் செயலாற்றினேன்” என்றார்.

ஏஞ்சலினா தனி ஒரு நபராக இல்லாமல், ‘தி கேண்டில்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல வேலைகளைச் செய்து வருகிறார். ஹேண்ட் தெரபி, சுவருக்கு வண்ணம் பூசுவது, பொம்மலாட்டம், முடி தானம், ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குதல், கவுன்சிலிங், பொது இடங்களைச் சுத்தம் செய்வது என இவர்களின் வேலையின் பட்டியல் நீள்கிறது.

‘‘சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் இயல்பிலேயே ஆர்வமும், அக்கறையும் எனக்குள் அதிகம் இருந்ததால், சிறிய அளவில் இதைச் செய்து பார்க்கலாமே என்று, பொது இடங்கள், பள்ளி-கல்லூரி வளாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அழுக்கு படிந்திருக்கும் சுவர்களைச் சுத்தம் செய்யவும் ‘வர்ணம்’ என்ற தலைப்பில் வண்ணம் பூசி அழகு பார்த்தோம்’’ என்று கூறும் ஏஞ்சலினா, “நான் செய்யும் வேலைகளையும், அதற்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் பார்த்த பின் என், லட்சியத்தைப் புரிந்து கொண்டு உறுதுணையாக என் கணவர் இணைந்தார். எங்களுக்கான வாய்ப்புகள் நிறையக் கிடைத்தது. கிண்டி ரயில் நிலையத்தின் சுவருக்கு வண்ணம் பூசப் பெரிய பெயிண்ட் நிறுவனம் எங்களுக்கு ஸ்பான்சர் செய்தார்கள்” என்கிறார்.

கல்லூரி மாணவிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடமிருந்து தலைமுடிகளைப் பெற்று அதைச் செயற்கை தலை முடி விக்காக்கி அடையாற்றில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘த கேண்டல்ஸ்’ அமைப்பு மூலம் கொடுக்கின்றனர். இதனோடு சில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். “என் பயணம் மக்களுடைய பாதையில் பயணிக்க வேண்டும். மற்றவர்களின் பிரச்சினைகளை ஒப்பிடும் போது நம் பிரச்சினை கடுகளவே. எனவே நமது பிரச்சினைகளை மட்டும் நினைத்து அதிலே தேங்கி விடாமல் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நம் சிக்கல்களை மறந்து அவர்களது பிரச்சினைகளையும் மறக்கடிப்போம்” என்றார் ஏஞ்சலினா.

ஆனந்தி

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: