கம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்!

நன்றி குங்குமம் தோழி

நடிகை வினோதினி

‘‘சாப்பாடுதான் பிரதானம். அதுதான் வாழ்வாதாரம். அந்த ஒரு பருக்கைக்காகத்தான் நாம அன்றாடம் ஓடுகிறோம். நாங்க நடுத்தர குடும்பம்தான். எல்லா கஷ்டங்களையும் பார்த்து இருக்கோம். ஆனாலும் சாப்பாட்டுக்காக இன்று வரை நான் கஷ்டப்பட்டது இல்லை. உணவு தான் அடிப்படை. யாருக்காவது தானம் கொடுக்கணும்ன்னா சாப்பாடு தான் கொடுப்பது என்னுடைய வழக்கம்’’ என்று தன் உணவுப் பயணம் குறித்து பேசத் துவங்கினார் நடிகை வினோதினி.

‘‘எங்க வீட்டில் சுத்த சைவம். அம்மா சைவ உணவுகளை ரொம்ப நல்லா சமைப்பாங்க. சின்ன வயசில் பருப்பு, நிறைய நெய், பொரியல், சாதம்ன்னு சாப்பிட்டு வளர்ந்தேன். குறிப்பா ெதன்னிந்திய வகை உணவுகளான கூட்டு, பொரியல், வறுவல்ன்னு எல்லாமே இருக்கும். நான் +2 படிக்கும் வரை அம்மா சாப்பாடு கட்டித் தந்திடுவாங்க.

வீட்டில் பல வகை சாப்பாடு இருந்தும், நான் பள்ளிக்கு 12 வருஷமும் ரசம் சாதம் தான் கொண்டு போவேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் ரசம் மற்றும் ஒரு டப்பா நிறைய இரண்டு வகை காய்கறி இருக்கும். அம்மா சைவம்ன்னா, அப்பா அசைவம் விரும்பி சாப்பிடுவார். அதுவும் வித்தியாசமா சாப்பிட விரும்புவார்.

அவர் தான் எனக்கும் என் அண்ணனுக்கும் அசைவ உணவு சாப்பிட பழகினார். அப்ப நான் ஐந்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். சரியா நினைவு இல்லை. நாங்க குடும்பமா சாப்பிட வெளியே போவோம். அப்படித்தான் ஒரு முறை அப்பா எங்கள ஒரு ஓட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனார். அங்க தான் சிக்கன் வறுவல் சாப்பிட்டேன்.

அந்த சுவை எனக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு. அதன் பிறகு சிக்கன் எனக்கு பிடிச்ச உணவா மாறிடுச்சு. எங்க வீட்டில் சைவம் என்பதால், வீட்டில் சமைக்க மாட்டாங்க. என் பாட்டி, அம்மா ரொம்ப ஆச்சாரம். அவங்களுக்கு தெரியாம நான் அண்ணா, அப்பாவுடன் வெளியே போய் சாப்பிடுவோம். இப்பதான் வீட்டில் ஆர்டர் செய்து சாப்பிடுறோம்’’ என்றவர் கல்லூரி படிக்கும் போது முதல் முறையாக மீன் உணவினை சுவைத்துள்ளார்.

‘‘சிக்கன் மட்டுமே பழகினதால, அப்ப வெறும் சிக்கன் தான் நிறைய சாப்பிடுவேன். எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படிச்ச சமயம். எங்க கல்லூரிக்கு எதிரில் பொன்னுசாமி ஓட்டல் இருந்தது. ஒரு முறை நானும் என் தோழி அனுவும் அங்க சாப்பிட போனோம். அவ எனக்காக மீன் வறுவல், மீன் குழம்பு, சுறா புட்டுன்னு ஆர்டர் செய்தா. அப்பதான் முதல் முறையா மீனை நான் சுவைத்தேன்.

அப்படி ஒரு ேடஸ்ட். அந்த சுவையில் மீன் உணவை நான் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. நான் சிக்கன், மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகள்னு கொஞ்சம் செலக்டிவா தான் சாப்பிடுவேன். ஆனா என் அண்ணன் அப்படி இல்லை. அவன் எல்லா உணவினையும் சாப்பிடுவான். இப்போ அவன் திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலாயிட்டான்.

ஒரு முறை நான் சிங்கப்பூர் போன போது, அங்கு ஒரு உணவகத்தில் சாப்பிடணும்ன்னு இங்கேயே முடிவு செய்திட்டு போனேன். மெரினா பே, சிங்கப்பூரின் ஐகானிக் ஓட்டல். அதில் பலதரப்பட்ட உணவகங்கள் உண்டு. அதில் ஒன்று தான் ‘பிளாக் ைநட் வாரியர்’. இங்க என்ன ஸ்பெஷல்னா... நாமளே நமக்கான உணவினை சமைத்து சாப்பிடணும். நான் மஷ்ரூம் நூடுல்ஸ் சொன்னேன்.

 மஷ்ரூமில் உள்ள எல்லா வகையும் டேபிளில் அடுக்கிட்டாங்க. அதன் பிறகு அதற்கான காய்கறி, நூடுல்ஸ், மசாலா பொருட்கள் மற்றும் சுடு தண்ணீர் (இதை பிராத்ன்னு குறிப்பிடுறாங்க) எல்லாம் என் சாப்பாட்டு மேஜையில் வைத்திடுவாங்க. நாம விரும்பும் மசாலாக்களை சேர்த்து நாமே சமைச்சு சாப்பிடணும். அதை சாப்பிட ஒரு பெரிய கூட்டமே நிற்கும். அப்படி சாப்பிட நானும் என் அண்ணியும் அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டு வந்தோம். அந்த அனுபவம் வித்தியாசமா இருந்தது’’ என்றவர் சென்னையிலும் இது போன்ற பல வித்தியாசமான உணவகங்களின் ரெகுலர் கஸ்டமராம்.

‘‘சென்னையில் வித்தியாசமான உணவகங்கள் ஆரம்பிச்சா போதும், நானும் அப்பாவும் அங்கு படை எடுக்க ஆரம்பிச்சிடுவோம். இங்கு நுங்கம்பாக்கத்தில் ‘ஸ்பைஸ் கிளப்’ன்னு ஒரு உணவகம் இருக்கு. இத்தாலியன், மெக்சிகன் உணவுகள் மட்டும் இல்லாமல் நம் இந்திய உணவுகளும் இங்குண்டு. இந்திய உணவுகள் எல்லாம் மும்பை, கொல்கத்தா தெருக்களில் கிடைக்கும். சாட் உணவுகளை வித்தியாசமான முறையில் கொடுப்பது தான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி. அங்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும். இத்தாலியன், சைனிஸ் மட்டும் இல்லாமல் ஜப்பான் மற்றும் கொரியன் உணவுக்கும் நான் அடிமை.

இந்தியாவின் முதல் ஜப்பான் உணவகம் சென்னையில் தான் இருக்கிறது. டாலியா என்ற அந்த உணவகத்திற்கு 2013ல் இருந்து இன்று வரை நானும் அப்பாவும் ரெகுலர் வாடிக்கையாளர்கள். அங்க இருக்கும் எல்லா உணவையும் நாங்க சாப்பிட்டு இருக்கோம். ‘வைன் சாத்ேத’ என்னுடைய பேவரெட். அதே போல டி.டி.கே சாலையில் ‘நியு சியோல்’ன்னு கொரியன் உணவகம் இருக்கு.

அங்கு மாசா மாசம் நானும் அப்பாவும் போயிடுவோம். இந்த இரண்டு ஓட்டலிலும், ஜப்பான் மற்றும் கொரியன் உணவின் ஆத்தென்டிக் சுவையினை உணர முடியும். நானும் அப்பாவும் அதிக காரம் சாப்பிட மாட்டோம். அதனாலேயே நாங்க அங்க அடிக்கடி போவது வழக்கம். கீரை உணவு இங்கு வித்தியாசமா இருக்கும். அதை பிளாஷ் ஃபிரை செய்வாங்க. முதல்ல தண்ணீரில் கொதிக்க வச்சு பிறகு எண்ணையில் பொரிப்பாங்க. அது மொறுமொறுன்னு கிரிஸ்பியா இருக்கும்.

ஒரு முறை நானும் அண்ணியும் கம்போடியா போய் இருந்தோம். அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தோம். தினமும் காலை நம்ம ஊரு பழையதை அவங்க கஞ்சின்னு சாப்பிடுறாங்க. அப்புறம் கோதுமை நூடுல்ஸ் சூப் போல சாப்பிடுவாங்க. அங்க காலை ஆறு மணிக்கே முழு சாப்பாடு சாப்பிடுவாங்க. அவங்க உணவில் காரமே இருக்காது.

நான் காரசாரமா சாப்பிட்டது தேவராட்டம் பட ஷூட்டிங் போது தான். 30 நாள் மதுரையில் ஷூட்டிங். அங்க மதிய சாப்பாட்டில் கண்டிப்பா நண்டு இருக்கும். எவ்வளவு வேணும்ன்னாலும் அள்ளி சாப்பிடற அளவுக்கு இருக்கும். கண்ணு மூக்கு தண்ணீர் வரும் அளவுக்கு சாப்பிட்டேன். ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதன் பிறகு ராட்சசன் படத்தை தெலுங்கில் ராட்சசடுன்னு எடுத்தாங்க. அங்க ஆந்திரா சாப்பாடு. அதை சாப்பிட்டும் அந்த ஃபிளேவர் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது.  

ஷூட்டிங் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் எனக்கு வித்தியாசமான அனுபவம் தான். வேலைக்காரன் படத்திற்காக சிவகார்த்திகேயன், முனீஷ்காந்த், தம்பிராமய்யா, பகத்பாசில்... எல்லாரும் மலேசியா போய் இருந்தோம். எனக்கு 25 நாள் ஷெட்யூல். தினமும் மதிய உணவு காடை, கவுதாரி, உடும்பு கறின்னு குறைந்தபட்சம் ஐந்து அசைவ உணவு இருக்கும்.

இதை தவிர இவங்க வந்து இருக்காங்கன்னு  தெரிந்து மலேசியா பேன்ஸ் அவங்க வீட்டில் இருந்து விதவிதமா கொண்டு வருவாங்க. அந்த வருஷம் அம்மா தவறிட்டதால நான் இரண்டுவருஷம் சாப்பிடாம இருந்தேன். அதனால என்னால அசைவ உணவினை சுவைக்க முடியாம போயிடுச்சு. அதே போல நாங்க தங்கி இருந்த இடத்துக்கு எதிரே ஒரு பாய் கடை வச்சிருந்தார். அவர் கடையில் இரவு ஒரு மசாலா டீ, இட்லி தோசை சாப்பிட்டு தான் ஓட்டலுக்கே போவோம்.

களவாணி 2 பட ஷூட்டிங்காக தஞ்சாவூரில் தங்கி இருந்தோம். மணப்பாடில் ஷூட்டிங் முடிச்சிட்டு வரும் வழியில் ஒரு டீக்கடையில் வடை, பஜ்ஜி, டீ சாப்பிடுவோம். தஞ்சாவூர் சுத்தி கிராமத்தில் எங்க ஷூட் இருந்தாலும் அந்த கடையில் டீ சாப்பிட்டு தான் போவோம். அங்க எறுமை பாலில் தான் டீ போடுவாங்க, வித்தியாசமா இருக்கும். அதுக்காகவே வருவோம். கடல் பட ஷூட்டிங்காக  திருச்செந்தூரில் தங்கி இருந்தோம். அப்ப நானும் குரு சோமசுந்தரமும் பக்கத்தில் ஒரு இடத்தில் மீன் நண்டு சமைச்சு தருவாங்கன்னு கேள்விப்பட்டு, அந்த கடையில் தேடி போய் ராத்திரி சாப்பிட்டு வந்தோம்.  

2017 இங்கிலாந்து போனது என்னால மறக்க முடியாத பயணம். அங்க ரொம்ப வரலாற்று புகழ் பெற்ற இடத்தில் போய் சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டேன். அங்க ஒரு புகழ்பெற்ற பப் இருக்கு, அங்கு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வருவாங்க. அங்க நானும் என் ஃபிரண்டும் மதிய உணவு போய் சாப்பிட்டோம். அப்புறம் டப்லின் காசில்ன்னு புகழ்பெற்ற பப். அது புகழ்பெற்ற பாடகர்கள் பாடின இடம். அங்க ஒரு நாள் காலை உணவு போய் சாப்பிட்டு வந்தேன். இங்க பப்ன்னா மது அருந்தும் இடம். அங்க அப்படியில்லை.

பப்ன்னா உணவு சாப்பிடும் இடம். நம்மூர் சரவணபவன் மாதிரி தான் இருக்கும். மகாபலிபுரத்தில் ஜெர்மன் பேக்கரின்னு ஒரு கடை இருக்கு. அங்க கேக் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். அதை வெளிநாட்டினர் தான் நடத்துறாங்க. ஆறு மாசம் இங்க இருப்பாங்க. ஆறு மாசம் ஜெர்மன் போயிடுவாங்க. அவிச்சி பள்ளி அருகில் இருக்கும் ‘திருநெல்வேலி மெஸ்’சில் தோசை வேற லெவலில் இருக்கும்’’ என்றவருக்கு அவரின் அம்மா வைக்கும் ரசம் என்றால் கொள்ளை பிரியமாம்.  

‘‘எங்க அம்மா ரசம் சூப்பரா வைப்பாங்க. கண்டந்திப்பிலி, பூண்டு, தக்காளி, மைசூர், பைனாப்பில் ரசம்ன்னு பத்து வகை வைப்பாங்க. அப்புறம் வத்தக்குழம்பு, சாம்பார் எல்லாம் சூப்பரா செய்வாங்க. அவங்க ஃபேமஸ் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் தான். தேன்குழல் செய்து பெரிய டப்பாவில் போட்டு வைப்பாங்க.

நானும் அம்மாவும் மொட்டைமாடியில் வத்தல் போட்டு இருக்கோம். அப்புறம் ஊறுகாய் கூட செய்வாங்க. எனக்கு ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும். எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன். அப்புறம் பூரி கிழங்கு, தினமும் கொடுத்தாலும் அலுக்காம சாப்பிடுவேன். அதே மாதிரி எனக்கு பிடிக்காத உணவு பொங்கல்’’ என்ற வினோதினிக்கு கம்போடியாவிற்கு சென்று மறுபடியும் வெஜ் சூப் சாப்பிட வேண்டுமாம்.

வாட்டர்மெலன் ஃபெட்டா சீஸ்

தர்பூசணியை நறுக்கிக் கொள்ளவும். ஃபெட்டா சீஸ் துருவிக்கொள்ளவும். இந்த சீஸ் கொஞ்சம் உப்பா இருக்கும். உலர்ந்த நட்ஸ் தேவையானவை. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தர்பூசணி அதில் துருவிய சீஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து கிளறவும். இதில் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். இதனை காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

வெஜ் புலாவ்

இது பேச்சலர் உணவு. நான் அடிக்கடி செய்யும் உணவு. உருளை, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பட்டாணி, மஷ்ரூம் என உங்களுக்கு பிடிச்ச எல்லா காய்கறியும் கட் செய்து வச்சுக்கணும். வெங்காயம், தக்காளி தேவையானதை நறுக்கி வச்சுக்கணும். இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும். காய்கறியை ஒன்றும் பாதியுமா வேகவைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு குக்கரில் எண்ணை சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுதினை வதக்கி தேவையான மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் ேதவையான அளவு தண்ணீர் மற்றும் அரிசியை சேர்த்து இரண்டு விசில் விடவும். இன்ஸ்டன்ட் புலாவ் தயார்.

ப்ரியா

Related Stories: