×

கிறிஸ்டியனும் எலியாஸும்

நன்றி குங்குமம் தோழி

தாயின் அருகாமையும் அரவணைப்பும் இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள் என்னவாகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது ‘In a Better World’. பன்னிரெண்டு வயதான சிறுவன் கிறிஸ்டியன். அம்மா புற்றுநோயால் இறந்துவிடுகிறார். தந்தை பெரிய கோடீஸ்வரர். பாட்டி வீட்டில் இருந்து படிக்கிறான். அவன் யாரிடமும் சரியாக பேசுவதில்லை. தனிமையில் வாடுகிறான். அம்மாவின் நினைவு அவனை அலைக்கழிக்கிறது. அவனுக்கும் தந்தைக்கும் இடையே கூட அவ்வளவாக நெருக்கம் இல்லை.

தந்தையும் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியே சென்று விடுகிறார். இந்நிலையில் கிறிஸ்டியன் தன் பள்ளியில் எலியாஸ் என்ற மாணவனைச் சந்திக்கிறான். எலியாஸும் கிறிஸ்டியன் பிறந்த அதே நாளில் பிறந்தவன். அப்பள்ளியில் படிக்கும் சிலரால் அவமானத்திற்கும் பாதிப்புக்கும் ஆளாகிறான். அவனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறான் கிறிஸ்டியன்.

எலியாஸின் தந்தையும், தாயும் மருத்துவர்கள். இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள். எலியாஸிற்கு ஒரு தம்பி இருக்கிறான். தந்தை இருவேறு உலகில் சஞ்சரிக்கிறார். ஒரு உலகில் ஆப்பிரிக்க அகதிகளின் முகாமில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர். இன்னொரு உலகில் அன்பான தந்தை. இருந்தாலும் நல்ல கணவனாக அவரால் இருக்க முடிவதில்லை. எலியாஸும் தம்பியும் சில நாட்கள் தந்தையுடனும் சில நாட்கள் தாயுடனும் இருக்க வேண்டிய நிலை.

தாயை இழந்து தந்தையை வெறுத்து வாழும் சிறுவனான கிறிஸ்டியனும், தந்தையும் தாயும் பிரிந்து வாழும் சூழலில் வளரும் சிறுவனான எலியாஸும் விரைவிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள்.ஒருநாள் அற்பமான சம்பவத்திற்காக தன் மகன்கள் மற்றும் கிறிஸ்டியன் முன்னால் முரடன் ஒருவனால் எலியாஸின் தந்தை தாக்கப்படுகிறார். ஆனால், அவர் திருப்பித் தாக்குவதில்லை. இதைப் பார்க்கும் எலியாஸ் தன் தந்தையிடம் ‘‘ஏன் நீங்கள் திருப்பி அடிக்கவில்லை? பயந்து விட்டீர்களா..?’’ என்று கேட்கிறான். தன் மகனின் கேள்வி அவரை மீண்டும் அவமானத்திற்குத் தள்ளுகிறது.

தான் எதற்கும் பயந்தவனில்லை என்று நிரூபிக்க தன்னை தாக்கியவனை நோக்கி செல்கிறார். மீண்டும் மகன்கள் முன் அந்த முரடனால் பல முறை தாக்கப்படுகிறார். இருந்தாலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பதை போல அமைதியாகவே இருக்கிறார். அந்த முரடனிடம், ‘‘நான் பயப்படவில்லை...’’ என்று சொல்கிறார்.

எலியாஸிடம், ‘‘அவன் என்னை அடித்தது முட்டாள் தனம். நானும் பதிலுக்குத் திருப்பி அடித்தால் அவனை விட  பெரிய முட்டாள் ஆகிவிடுவேன்...’’ என்கிறார். இதே நிகழ்வு சிறுவர்களான எலியாஸாலும், கிறிஸ்டியனாலும் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.கிறிஸ்டியன் தன் தாயை மிகவும் நேசித்து இருக்கிறான்.

அவளும் தன் மகனை மிகவும் நேசித்து இருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட புற்று நோய் உடலை சிதைக்கிறது. உருவம் குழந்தையை போல உருமாறுகிறது. தன் தாயின் வலியை, துயரை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கிறிஸ்டியனின் மனம் சிறுவனுக்குரிய இயல்பை இழக்கிறது. மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருந்த தாயின் உருவம் அவனுக்குள் மரணம் பற்றிய பிரக்ஞையை வலுவாக மனதிற்குள் செலுத்தி விடுகிறது.

கிறிஸ்டியனின் தந்தை அம்மா நலமாகி திரும்ப வந்துவிடுவார் என்று அவனிடம் பொய் சொல்கிறார். கிறிஸ்டியனும் அம்மா திரும்பி வந்துவிடுவாள் என்று நம்புகிறான். ஆனால், அவரால் தன் மனைவியின் கடினங்களை அருகிலிருந்து பார்க்க முடிவதில்லை. அதனால் தன் மனைவி நோயால் அவதிப்படுவதைக் காட்டிலும் இறந்துவிடுவது நல்லது என நினைக்கிறார். இதை அறிந்த கிறிஸ்டியனின் உள்ளத்தில் தவறுதலாக தந்தையின்
மீது வெறுப்புணர்வு உண்டாகிறது. அம்மாவின் மரணத்துக்குக் காரணம் அப்பா என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அப்பாவுடன் அவன் சரியாக கூட பேசாமல் போகிறான்.

அப்பாவிச் சிறுவனான கிறிஸ்டியன் நமக்கு கோபக்காரனாக, ஆபத்தானவனாக காட்சி தருகிறான். அவனின் நடவடிக்கையும், இயல்பும் அவனின் மீது ஒரு வகையில் இரக்கத்தை ஏற்படுத்தினாலும் நம்மை பயமுறுத்துகிறவனாக இருக்கிறான். அத்துடன் அவன் வெடிகுண்டு தயாரிப்பதைப் பற்றி அறிந்து கொண்டு இருக்கிறான். மற்றவர்களைத் தாக்கும்போது கத்தியைப் பயன்படுத்துகிறான்.

அவனுக்குள் இருக்கும் கோபக்காரனை, ஆபத்தானவனை, பழிவாங்கும் எண்ணம் மிகுதியாக உள்ளவனை உருவாக்கியது அவனால் மிகவும நேசிக்கப்பட்ட தாயின் இழப்பாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் எலியாஸிடம் பயந்த உணர்வையும், மற்றவர்களை காப்பாற்ற தன்னையே பணயம் வைக்கும் ஒரு தியாகியையும் காணமுடிகிறது. சிறுவர்களாக நடித்தவர்கள் நடிப்பு அவ்வளவு சிறப்பு.ஆஸ்கர்,கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய இப்படத்தின் இயக்குனர் சுசன்னா பேர்.

- த.சக்திவேல்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!