×

சிறகுகள்

நன்றி குங்குமம் தோழி

அதிர அதிர தடதடவென ராயல் என்பீல்டு வண்டியில் வந்து அசால்டாய் இறங்குகிறார் ஜெயந்தி… அவரின் கைகளில் பத்து, பனிரெண்டு மரக்கன்றுகள்.. விசாரித்ததில் ஈரோட்டில் இயங்கும் சிறகுகள் அமைப்பில் இருப்பதாகவும், நண்பர்களோடு இணைந்து மரக் கன்றுகளை நடப்போவதாகவும் தெரிவித்தார்.
யார் உதவி என்று அழைத்தாலும் நேரம் காலம் பார்க்காமல் ஓடி வந்து வந்து நிற்கிறார் ஜெயந்தி. தன்னைச் சூழ்ந்து நின்ற சிறகுகள் அமைப்பின் நண்பர்களுக்கு மத்தியில் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

‘‘என்னுடைய கணவருக்காக வாங்கிய டிஸ்கவர் பைக் அப்படியே ஓடாமலே கிடந்தது. ஒருநாள் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில், இரவில் வெளியில் போக வேண்டிய சூழல். அவரின் கியர் வண்டியை எடுத்து நம்பிக்கையோடு மிதித்து ஓட்டத் தொடங்கினேன். அத்தனை வெறி மனதில்.

அதன் பிறகு எங்கு சென்றாலும் டிஸ்கவர் பைக்கே எனக்குத்  துணை நின்றது. தொடர்ந்து ராயல் என்பீல்டு வண்டியையும் ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஒரு முறை நெகிழி(plastic) பயன்பாட்டை தடை செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது விழிப்புணர்வுக்காக நெடுஞ்சாலையிலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பைக்கில் ‘ஸ்டான்டிங் ரைட்’ செய்தேன்’’ எனக் கூறி நம்மை பிரமிக்க வைத்தார்.

மேலே தொடர்ந்தவர்…‘‘மனிதன் இன்று தன் சுயலாபத்திற்காக மரங்களை வெட்டி காடுகளை அழித்து வருகிறான். விளைவு, மழை குறைந்ததோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை உணர்ந்த ஈரோட்டு நண்பர்கள் சிலர், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக  இணைந்து நண்பர்கள் தினத்தில், முகநூல் மூலம் தொடங்கியதே சிறகுகள் அமைப்பு. சிறகுகளின் முக்கியப் பணி மரம் நடுதல்.

மரங்கள் ஆக்ஸிஜனை வெளியிடுவதோடு, காற்றில் இருக்கும் மாசைக் குறைத்து மழை தருகிறது. மேலும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் வழிவகை செய்கிறது. நம்மை சுமக்கும் பூமிக்கு நாம் எதையாவது திருப்பிச் செய்ய வேண்டும்.நண்பர்கள் அவரவர் வேலை மற்றும் நேரத்தைப் பொருத்து மரம் நடு நிகழ்வில் பங்கேற்கிறோம்.

இது முழுக்க முழுக்க எங்கள் திருப்திக்காகவே. ஏனெனில் இயற்கை நமக்கு ரொம்ப முக்கியம். அந்த இயற்கையை நாம் மதித்தால்தான் நாளை வரப்போகும் நம் சந்ததி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். வளர்ந்து நிற்கும் மரத்தை சில வருடங்கள் கழித்து நாம்
பார்க்கும்போது, ‘அட நாம வைத்த மரம்’ என்கிற நினைப்பே மகிழ்ச்சி தரும்.

துவக்கத்தில் எங்களின் கை பணத்தைப் போட்டு மரக் கன்றுகள், அதைப் பாதுகாக்க வலை என வாங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் ஆர்வம் மற்றும் செயல்பாட்டைப் பார்த்த ஈரோடு மக்கள் அவர்களாகவே முன் வந்து பண உதவிகளைச் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறுப்பினர்களும் அதிகரித்தனர். மரம் நட வேண்டும் என்றால் அதிகாலை 6 மணிக்கே அங்கிருப்போம். நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், வளைகாப்பு, நினைவு நாள் என அனைத்துக்கும் மரங்களை நடுகிறோம்.

கூலி வேலை செய்பவரில் தொடங்கி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் வரை எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் உண்டு.  குழுவின் செயல்பாடுகள் வாட்ஸ் ஆப் குரூப்பில் முன்பே தெரிவிக்கப்படும். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மரம் நடுவதற்கான நாள். அன்றைய தினம் யாரெல்லாம் வர விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களை ஒருங்கிணைப்போம்.

இரண்டு தினங்களுக்கு முன்பே இடத்தை பார்த்து, எத்தனை மரங்களை நடலாம் என முடிவு செய்து, மரக் கன்றுகளை சேகரித்து வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 மரங்கள் நடுவோம். சில நாட்களில் 100 மரங்கள் கூட நடவேண்டியது இருக்கும். பெரும்பாலும் வேம்பு, அரச மரம், பூவரசு, ஆலமரம், நாக மரம், அத்தி, நாவல் மரம் என நாட்டு மரங்கள்தான் நடப்படும்.

மியாவாக்கி முறையிலும் மரங்களை நடுகிறோம். அதாவது ஒரு அடிக்கு ஒரு அடி என இடைவெளியில் அடர் வனங்களை ஈரோட்டைச் சுற்றிலும் உருவாக்குகிறோம். இதில் எல்லா மரங்களுமே கலந்து நடப்படும். இதுவரை 27 ஆயிரம் மரங்களை நட்டு வைத்துள்ளோம். இன்னும் வைத்துக் கொண்டே இருக்கிறோம். மரம் நடுவதற்காக மக்கள் எங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் பணி காலை 10 மணி வரை இருக்கும். அந்த மரத்தில் எங்கள் அமைப்பின் பெயரையும் இடம் பெறச் செய்வோம். நட்டு வைத்தமரங்களுக்கு ஒழுங்காக தண்ணீர் ஊற்றுகிறார்களா, சரியாகப் பராமரிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க குழுவும் உண்டு. நெடுஞ்சாலைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், மக்களே விரும்பிக் காட்டும் இடங்கள் என எல்லா இடங்களிலும் எங்கள் அமைப்பால் மரங்கள் நடப்படுகிறது.

மரக்கன்றுகளை ஃபாரஸ்ட் இலாகாவில் இருந்து பெறுகிறோம். தவிர்த்து தினம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் விதைகளை சேகரித்து சூரம்பட்டி அணைக்கட்டில் பதியமிட்டு கன்றுகளாக மாற்றி நடுகிறோம். அணைக்கட்டில் உள்ள அடர்வனம் எங்கள் அமைப்பு மூலம் உருவானதே. இதுவரை 10 முதல் 15 இடங்களில் அடர்வனங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். அந்த இடங்களில் மேகம் கட்டி மழை வரும்.

30 முதல் 35 ஆண்டு வயது நிறைந்த மரங்களை சிலர் அசால்டாக  அப்புறப்படுத்துவார்கள். நாங்கள் அவர்களிடம் பேசி புரியவைத்து ஜேசிபி இயந்திரம் மூலமாக மரத்தை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடுகிறோம். இதுவரை அதுமாதிரி 30 மரங்களை வேறு இடத்தில் நட்டு வைத்துள்ளோம். அரச மரம், ஆல மரம், வேம்பு இவை எல்லாம் அத்தனை எளிதில் வளரக்கூடிய மரங்கள் இல்லை. எனவே கூடுமானவரை அந்த
மரங்களை வெட்ட விடாமல் காப்பாற்றி, வேறு இடங்களுக்கு மாற்றுகிறோம்.

கடந்த ஆறு வருடமாகவே சிறகுகள் அமைப்பில் தொடர்ந்து செயல்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை மரம் நடும் குழுவோடு இருப்பேன். எனது செயல்பாட்டைப் பார்த்து சமீபத்தில் ‘அப்துல்கலாம் விஷன் 20’ விருதை வழங்கினார்கள். அதில் எனக்கு பாராட்டும், சான்றிதழ்களும் கிடைத்தது.

எங்கள் சிறகுகள் அமைப்பும் குழு விருதுகளையும் வாங்கி இருக்கிறது.பெற்றோர் இல்லாத நிலையில் உறவினர்களால் எனக்கு 13 வயதில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வாழ்க்கை எனக்கு அத்தனை சரியாக அமையவில்லை. கணவரின் ஆதரவு இல்லாத நிலையிலேயே என் தன்னம்பிக்கையும் செயல்பாடுகளும் என் குடும்பத்தைப் பலப்படுத்தின.

வேலைக்குச் சென்று கொண்டே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பிபிஏ முடித்தேன். இன்று எனது மகள் பி.எஸ்.ஸி முடித்து வேலைக்குச் சென்று கொண்டு இருக்கிறாள். மகன் +2 படித்து வருகிறான். துன்பங்களும், துயரங்களும் என்னைத் துரத்த கவலைகளை மறப்பதற்காகவே, யார் உதவி என்று அழைத்தாலும் முன்னால் போய் நிற்கத் தொடங்கினேன். இதோ இன்று ஈரோடு மக்கள் மனதில் நான் நிற்கிறேன்’’ என முடித்தார்.

- மகேஸ்வரி நாகராஜன்,
சுப்ரமணியன்.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!