×

நிலாவின் ‘பொன்னியின் செல்வன்’

நன்றி குங்குமம் தோழி

‘பொன்னியின் செல்வன்’ அமரர் கல்கி எழுதிய புதினம்.புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் வீட்டில் இந்த மொத்த அத்தியாயங்களும் இருக்காமல் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் எங்கு புத்தக கண்காட்சி நடைப்பெற்றாலும், அதில் ‘பொன்னியின் செல்வன்’ தனக்கென்று ஒரு புதிய வாசகர் வட்டத்தை இன்றும் அமைத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஐந்தாண்டுகள் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியான இது, கி.பி.1000ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழப் பேரரசின் வரலாற்றினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புதினம். 300 அத்தியாயம் கொண்ட வரலாறு படைத்துள்ள இந்த புதினத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார் 12ம் வகுப்பு மாணவியான நிலா சரவணராஜா.

17 வயது நிரம்பிய நிலா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.இந்த வயதிலேயே, 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் என்ற விருதினை தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளார்.‘‘நான் பிறந்தவுடனே எங்க வீட்டில் கேபிள் டி.வி இணைப்பை அப்பா துண்டித்துவிட்டார். என்னுடைய பொழுதுபோக்கே அம்மா, அப்பாவுடன் விளையாடுவது மற்றும் கதைக் கேட்பது தான்.

அப்பாதான் எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.அவை மூலமாக தான் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.ஒவ்வொரு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவும் சரி அப்பாவும் சரி நிறைய புத்தகங்கள் படிப்பாங்க.

சிறு வயதிலிருந்தே அதை பார்த்து வளர்ந்தாலும், கதை கேட்டதால் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் தானாகவே ஏற்பட்டது. இதற்கு அம்மாவும் அப்பாவும் தான் காரணம்.புத்தகம் எப்படியோ அதுபோல் ஓவியம் வரையவும் எனக்கு பிடிக்கும்’’ என்ற நிலா படிப்பிலும் படுச்சுட்டி.

‘‘வீட்டில் நாங்க மூணு பேருமே புத்தகம் படிப்போம், அதனால் வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் பொம்மைகளை விட புத்தகங்கள் தான் நிறைந்து இருக்கும்.எங்க வீட்டில் அப்பாவுக்கும் எனக்கும் தனித்தனி லைப்ரரி இருக்கு.எட்டாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு ‘பொன்னியின் செல்வன்’ அறிமுகமானது.முதல் அத்தியாயம் தான் படிக்க ஆரம்பிச்சேன்.முழு மூச்சாக அதனை படிச்சு முடிச்சிட்டேன்.அப்பா விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவும், அனிமேஷன் பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறார்.அவர்தான், பொன்னியின் செல்வன் படத்தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டார்” என்றார் நிலா.

பொன்னியின் செல்வனை காமிக்ஸ் வடிவில் கொண்டுவரும் முயற்சி எப்படி ஆரம்பித்தது?


அப்பாவும், நானும் நிறைய புத்தகங்கள் படிப்போம்.கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கான புத்தகங்களை நானே வாங்க ஆரம்பிச்சுட்டேன்.என்னதான் எனக்கான புத்தகங்களை நான் தேர்வு செய்தாலும், அப்பாவும் நானும் சேர்ந்து பல முறை படித்து ரசித்த புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’தான்.எங்க இருவருக்கும் அந்த புத்தகத்திற்கும் ஒரு உணர்வுபூர்வமான அழகான பிணைப்பு இருந்தது. அந்த தாக்கம் தான் அப்பாவை ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அனிமேஷன் சினிமாவாக உருவாக்க ஆயுத்தமாக்கியதுன்னு சொல்லலாம்.

இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வனை அனிமேஷனாக தயாராக்கிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான், அனிமேஷன் படம் அதுவும் 300 அத்தியாயங்கள் என்றால் அதற்கு நேரமாகும். அதற்கு முன் இதையே ஏன் ஒரு காமிக்ஸ் தொடராக வெளியிடக்கூடாது என்ற எண்ணம் அப்பாவுக்கு தோன்ற, மறுநாளே அதற்கான வேலையில் ஈடுபட்டார்.

அப்பா இதனை தமிழில் படக்கதையாக கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார். அதே சமயம் என்னை அதே படக்கதையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க சொன்னார். பொன்னியின் செல்வனை குழந்தைகளும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் படக்கதையாக மாற்ற நினைத்தார். அவ்வாறு இருக்கும் போது, அதே வயதை ஒத்த நான் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று அப்பா நினைத்தார்.

எனக்கும் அந்த கதை மேல் தனி ஈர்ப்பு இருந்ததால் நானும் மொழியாக்கம் செய்ய சம்மதித்தேன். ஆனால், இரண்டு மொழியில் புத்தகங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பிருக்கும் எனறு நான் நினைக்கவேயில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மட்டும் இல்லை இங்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்களும் தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகங்களை விரும்பி வாங்குகிறார்கள்.

புத்தகம் வாசிப்பது என்பது இன்றைய தலைமுறையினரிடம் மறைந்துவிட்டது. புத்தகம் வாசிப்பது உங்களுக்கு எந்த வழிகளில் உபயோகமாகியிருக்கிறது?
நான் இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆங்கிலம், தமிழ் என அனைத்து புத்தகங்களும் படிப்பேன். இதனால் பள்ளிப் பாடப் புத்தகங்கள் படித்தவுடன் எளிதில் மனதில் நின்றுவிடும்.

ஒவ்வொரு புத்தகம் முடித்த பின்னும், என் பார்வை மேலும் விரிவடையும். நல்ல விஷயம் ஒன்று படித்தேன் என மகிழ்ச்சியாக இருக்கும். எப்பவும் புத்தகங்களுடன் இருப்பதால், எனக்கு நேரம் போவதே தெரியாது. எப்போதும் வேறு ஒரு உலகத்தில் மகிழ்ச்சியாய் பறந்துகொண்டிருப்பேன். என்னைக் கேட்டால் இன்றைய காலத்து குழந்தைகள் கையில் இருந்து மொபைல் போனையும், வீடியோ கேம்ஸையும் வாங்கி புத்தகங்கள் கொடுக்க வேண்டும். புத்தகம் படிப்பதால் இயற்கையாகவே, மற்றவர்களைவிட எளிதில் புரிந்துகொள்ளும் திறனும், கற்பனைத்திறனும் அதிகமாக உருவாகும்.

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் எப்போது கிடைக்கும்?

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தொடங்கப்பட்ட காமிக்ஸ் வேலை, மூன்று வருடம் ஆகிவிட்டது. இதுவரை 17 பாகங்கள் வந்திருக்கின்றன. முதலில் கதாபாத்திரங்களுக்கு அனிமேஷன் கொடுக்க நேரமாகியது. தமிழ் வார்த்தைகள் சில ஆங்கிலத்தில் கிடைப்பது கஷ்டம். அது தேடவும் நேரமானது. அதனால் இனி நேரத்தை தாமதிக்காமல் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒரு பாகம் மொழிப்பெயர்க்கப்பட்டு படக்கதையாக வெளிவர 10 முதல் 15 நாட்கள்தான் ஆகும். முதலில் 100 பாகங்களை மட்டும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு வேறு காமிக்ஸ் புத்தகம் வெளியிடும் திட்டமுள்ளதா?

பொன்னியின் செல்வனின் காமிக்ஸ் தயாரிப்பாளர், கார்த்திகேயன் அருமையா காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்குவார். இப்போது எங்கள் முழு கவனமும், பொன்னியின் செல்வனில்தான் இருக்கிறது. அடுத்த முயற்சியாக, வள்ளுவனின் திருக்குறளையும், கதை வடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியை எங்கள் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திருக்குறள் கதை காமிக்ஸையும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் கொண்டுவரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது?

தமிழ் வளர்ச்சித் துறை மூலமாகத்தான் இந்த விருது எனக்கு கிடைத்தது. எங்களின் புத்தகங்களை நாங்கள் விருது பரிந்துரைக்கு அனுப்பவில்லை. அதனால் விருது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்பாவிற்குத்தான் முதலில் போன் செய்து விருது பற்றி பேசினார்கள். அப்பாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

அவர் உடனே எங்கள் எல்லாரையும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு, நேரில் வந்து கூறுவதாக சொல்லிட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் என்ன நடந்து இருக்கும் என்று ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும் மறுபக்கம் பதட்டத்துடன் வீட்டில் காத்திருந்தோம். வீட்டிற்கு வந்து எனக்கு விருது கிடைக்கப்போவதாகச் சொன்னார். முதலில் அவர் சும்மா விளையாடுவதாகத்தான் நாங்க எல்லாரும் நினைத்தோம். ஆனால் அப்பாவின் முகத்தில் தென்பட்ட சந்தோஷம், பெருமையை பார்த்த பிறகு தான் அவர் சொல்வது உண்மைன்னு புரிந்தது. அப்புறம் என்ன வீடு முழுக்க கொண்டாட்டம் தாண்டவமாடியது.

விருது வாங்கும் நாளும் வந்தது. நான் கொஞ்சம் நெர்வசாகத்தான் இருந்தேன். விருது நாளில் பாடலாசிரியர் மதன் கார்க்கி என்னிடம், ‘என் மகனும் உங்கள் புத்தகத்தைத்தான் விரும்பி படிப்பார். ஆனால் நீங்கள் இவ்வளவு சின்ன பெண் என்று எனக்கு தெரியாது. அருமையான முயற்சி’ என்று வாழ்த்து தெரிவித்தார். எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

தமிழுக்கே பெருமை, பொன்னியின் செல்வன்தான். அதனால் அதை மொழிபெயர்க்கும் வாய்ப்பு என்னிடம் வந்த போது, நியாயமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது. ஆனால் அப்பா, நீ பயப்படாமல் உனக்கு முதல் முறை படித்ததும் என்ன புரியுதோ, அதை மட்டும் எழுது. இது குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற அவரின் வழிக்காட்டுதல்படிதான் நான் எழுதினேன்.

பொன்னியின் செல்வனின் அடுத்தகட்டம்?

காமிக்ஸ் தொடர்ந்து, அனிமேஷன் சினிமாவும் வெளியாக உள்ளது. மேலும், இதே காமிக்ஸை டிஜிட்டல் வடிவத்தில், கொஞ்சம் எஃபெக்ட்ஸ் சேர்த்து வீடியோக்களாக வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். பலர் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனது நமக்கு தெரிந்ததுதான். அதனால், இந்த முயற்சி பாதிலேயே நின்று விடக்கூடாது என்பதில் நாங்க ரொம்பவே கவனமா இருக்கிறோம்’’ என்று தொடர்ந்து பேசிய நிலாவிற்கு, ஃபேஷன் டிசைனர் அல்லது கிராபிக் டிசைனர் ஆகவேண்டுமாம். அதே சமயம் எழுதுவதையும், புத்தகம் வாசிப்பதையும் தொடர போவதாக கூறினார்.

‘‘இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லை. அவர்களை சமாளிக்க தெரியாமல், மொபைல் போன் அல்லது வீடியோ கேம்ஸை கொடுத்துவிடுகிறார்கள். அவர்களை பொறுமையாகக் கையாண்டு, நல்ல பண்புகளை சொல்லிக் கொடுப்பது, ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்ய நினைப்பவர்களுக்கு இதைவிட நல்ல தொடக்கம் என்ன இருக்கிறது’’ என்ற நிலாவின் பொன்னியின் செல்வனின் காமிக்ஸ் தமிழ் மகிமையை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக அவர் எடுத்த இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- ஸ்வேதா கண்ணன்
ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!