×

பணத்தை கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்கி ‘லைவ் செக்ஸ்’ மூலம் வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்

* ஆபாச உரையாடலில் தொடங்கி உறவுக்கு அழைக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலம்
* வெப்சைட்டை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்
* செயலிகளை தடை செய்ய கோரிக்கை

சென்னை: செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல, ‘லைவ்’ செக்ஸ் வெப்சைட்டில் பணத்தை செலுத்தினால், அவர்களின் கேட்கும் ஆபாச தகவல்களை காம ரசம் சொட்ட சொட்ட வழங்கும் பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. இதை சாட் செய்வதுவம், சந்தாதாரர் ஆவதும் சட்டப்படி குற்றம் என்று தெரியமால் பல இளசுகள் தங்கள் பணம், வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி, பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக லைவ் செக்ஸ் உரையாடல், லைவ் செக்ஸ் வீடியோ இளைஞர்களை மட்டுமல்லாது அனைத்து வயதினரையும் ஆட்டி படைத்து வருகிறது.

இதில் பல போலி வெப்சைட்கள் உள்ளன. அதில் பணம் கட்டிய பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். பெண்களை பாலியல் தொழிலில் வைத்து பணம் சம்பாதிக்கும் பல புரோக்கர்கள் இந்த வெப்சைட்டுக்குள் ஊடுருவி வாடிக்கையாளர்கள் தொலைபேசி எண்ணை பெற்று கொண்டு, பெண்களை வைத்து ஆண் வாடிக்கையாளர்களிடம் பேசி, ‘நாங்கள் குடும்ப பெண்கள்’ என்று கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளதாகவும் தெரிகிறது. இதேபோன்று லைவ் செக்ஸ் வீடியோ என்ற ஒன்று தற்போது இளசுகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமாகி வருகிறது. அதில் எந்த மாநிலம், எந்த வயதுடைய செக்ஸ் வீடியோக்களை லைவாக பார்க்க வேண்டும் என்ற பிரிவில் சென்று அதை நாம் தேர்ந்தெடுத்த பின்பு அதற்கான பணம் எவ்வளவு என்பது குறித்து தெரியவரும். அதை நாம் ஆன்லைனில் செலுத்திய பிறகு நேரலையில் செக்ஸ் வீடியோ பார்க்க முடியும். இதை பலரும் தற்போது பார்த்து வருகின்றனர்.

அவ்வாறு பார்ப்பவர்கள் அதில் உள்ள செயலிகளை பயன்படுத்தி கமெண்ட் செய்ய முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர் கூறும் கமெண்டுகளை கேட்டு வீடியோவில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றார்போல் உடலுறவில் ஈடுபடுவார்கள். இதற்கு தனியாக பணம் கட்ட வேண்டும். பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணையதளம் மூலமாக இளைஞர்களையும் மற்ற வயதுடையவர்களையும் ஒரு குறிப்பிட்ட இணையதள கும்பல் ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இதில் சென்று பலர் பணத்தை இழந்தாலும் அவர்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. காரணம் புகார் கொடுத்தால் நமக்கு அசிங்கம் என்பதால் பலரும் முன்வருவதில்லை.

மேலும் பலர் தங்களது தொலைபேசி எண்களை கொடுத்து அதன் மூலம் சிக்கலிலும் மாட்டியுள்ளனர். குடும்ப பெண்கள் போல பேசி, பலர் தாங்கள் கூறும் இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. ஆனால் பெரிய அளவில் யாரும் புகார்கள் கொடுக்கவில்லை. இது மட்டுமல்லாமல் இதுபோன்ற இணையதளங்கள் வாயிலாக பல பெண்கள், எதிர்முனையில் உள்ளவர்களின் வாட்ஸ்அப் நம்பர்களை வாங்கி அதன் மூலம் தொடர்ந்து பேசி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் குடும்ப பெண்கள் போல் நடித்து, பல ஆயிரங்களை பறித்து கொண்டு இறுதியில் அவர்கள் கைபேசி எண்ணை மாற்றி மீண்டும் வேறு நபர்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சில புகார்கள் காவல்துறைக்கு வந்தாலும் அவர்கள் பெரியதாக நடவடிக்கை எடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்முனையில் வருபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் அனைத்தும் போலியானதாக உள்ளதாகவும், இவர்கள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆபாச இணையதளங்கள் பலவற்றை ஒன்றிய அரசு தடை செய்தது. ஆனால் தற்போதுகூட கூகுளில் சென்று செக்ஸ் சம்மந்தமாக எதை டைப் செய்தாலும் அதற்கான வீடியோ எளிதில் வருகிறது. அதற்கு முன் நீங்கள் 18 வயதை கடந்தவர்களா என்று கேட்டு அதன் பின்பு ஆபாச படங்கள் வருகின்றன. தடை செய்யப்பட்ட பல வெப்சைட்டுகள் மற்றும் செயலிகள் தற்போது வேறு உருவில் இயங்கி வருகின்றன. இதனை தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே கூறலாம். எனவே வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

* அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கொடுமை
செக்ஸ் ஆடியோ மற்றும் வீடியோ கலந்துரையாடலில் பல பெண்களும் ஏமாந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆரம்பத்தில் உள்ளே சென்று, தான் ஒரு பெண் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திய பிறகு எதிர்முனையில் உள்ளவர்கள் ஆண் என்பதை உறுதிப்படுத்தி கொண்டு உரையாடல்களை தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் மிகவும் நளினமாக பேசி அந்த பெண்களின் குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகு அவர்களிடம் ஆபாசமாக பேசி அந்த பெண்களையும் ஒரு கட்டத்தில் ஆபாசமாக பேச வைக்கின்றனர்.

அதன்பிறகு அந்த பெண்களின் வாட்ஸ்அப் நம்பர்களை பெற்று அவரிடம் ஆபாசமாக பேசி அவை அனைத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்து பின்பு அந்த பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களும் நடக்கிறது. மேலும் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பெண்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும், ஆனால் பெண்கள் தங்களது குடும்ப மானத்தை நினைத்து புகார் கொடுக்காமல் கைபேசி எண்களை மாற்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

* பேக்கேஜ் ரூ.499 டூ 1 லட்சம்
நாம் ஒரு வெப்சைட்டை தேர்வு செய்து, பாலினம், வயது, மின்னஞ்சல்,  முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு  எதிர்முனையில் எந்த வயதுடைய பெண் நம்மிடம் பேச வேண்டும் என்பது குறித்தும்  டைப் செய்ய வேண்டும். உள்ளே சென்றால் பேக்கேஜ் என்ற பிரிவு வரும். அதில்  சென்று நாம் செலுத்த வேண்டிய தொகையை தேர்வு செய்ய வேண்டும். 499 ரூபாயில்  இருந்து லட்சக்கணக்கில் பணம் குறிப்பிடப்பட்டிருக்கும். பணத்திற்கு  ஏற்றாற்போல் நம்மிடம், அவர்கள் உரையாடுவார்கள். மேலும் லொகேஷன்  (இருப்பிடம்) என்ற பிரிவில் சென்று நாம் எங்கு இருக்கிறோம் என்பதையும் டைப்  செய்ய வேண்டும். இவ்வாறு டைப் செய்து பணம் கட்டிய பிறகு, அவர்கள் நம்முடன்  உரையாடுவார்கள்.

* பணமும் போகும்... வாழ்க்கையும் போகும்
லைவ் சாட்டிற்கு பின்னால் ஒரு பெரிய மோசடி கும்பலே இருப்பதாகவும் உன்னிப்பாக கவனித்து இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகளை தடை செய்வதன் மூலம் மோகத்தால் அடிமையாகி உள்ள அப்பாவிகளை காப்பாற்ற முடியும் என சமூக  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பணம் கட்டி இதுபோன்ற வெப்சைட் பார்ப்பது குற்றம் என்பது அறியாமலேயே பலர் சிக்கிவிடுகின்றனர். இதனால் அவர்களின் பணம், எதிர்காலம் பாழாகிறது. மேலும் தற்போது செல்போன்  மூலம் இதுபோன்ற செயலிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதால் அவர்களது  செல்போனில் உள்ள பல விவரங்கள் வங்கி கணக்கு, பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்கள்  திருடப்பட்டு அதன் மூலமும் பணம் இழக்கும் பல சம்பவங்களும் நடைபெற்று  வருவதாகவும் தற்போதுள்ள நவீன யுகத்தில் செல்போன் எனும் பொருள் கையடக்க கல்லறையாக மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

* விபிஎன் செயலியால் சிக்கல்
தற்போது கூகுளில் பல ஆபாச இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன. இந்த ஆபாச இணையதளங்கள் மற்றும் செயலிகள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறித்து இதுவரை போலீசாருக்கு எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. வி.பி.என் மற்றும் சில சீன சாப்ட்வேர்களை பயன்படுத்தி, எங்கிருந்து இணையதளங்களை இயக்குகிறார்கள் என்பது குறித்து தெரியாத அளவிற்கு செயலிகளை பலரும் இயக்கி வருவதால் போலீசார் இதுகுறித்து புகார்கள் வந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மற்றபடி சிறிய புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

* எராளமான வெப்சைட்கள்
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடமாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே இயங்கி வருகின்றன. நாம் நமது மொபைலில் சென்று இன்டர்நெட் சேவையை ஆன் செய்த பிறகு, இதர சேவைகள் அடிக்கடி வந்து போகும். இதனை பாப்அப் என்று கூறுவார்கள். அவ்வாறு வந்து போகும்போது, அதனை நாம் தெரியாமல் தொட்டு விட்டால் குறிப்பிட்ட அந்த வெப்சைட்டுக்குள் சென்று அந்த வெப்சைட் ஓபனாகும். இதன்மூலம் நாம் அந்த வெப்சைட்டுக்குள் நம்மை அறியாமல் சென்று விடுவோம். பள்ளி பருவத்தில் உள்ள பலரும் இவ்வாறு பாப் அப் ஆகும் செக்ஸ் இணையதளத்தில் சென்று தங்களை அறியாமல் பார்த்து விடுகின்றனர்.

அதன் பிறகு அடிக்கடி சென்று அதனை பார்க்கின்றனர். இதனால் இளைய தலைமுறையினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த செக்ஸ் ஆடியோ சாட்டிங் மூலம் பல கல்லூரி பெண்கள் தனியாக ஒரு தொலைபேசி எண்ணை வாங்கி வைத்து கொண்டு ஆடியோ சாட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மாதம் இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைக்கின்றது. இதில் வாட்ஸ்அப் கால் மூலம் மட்டுமே அருகில் இருப்பவர்களிடம் ஆபாசமாக பேசி கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் பிறகு தங்கள் தொலைபேசி எண்ணை சுவிட்ச்ஆப் செய்து விடுகின்றனர். நாளொன்றுக்கு 2 மணி நேரம் வரை இதற்காக செலவு செய்து மாதம் 10,000 வரை சம்பாதித்து வருகின்றனர்.

Tags : Those who give money and buy risk and lose their lives through ‘live sex’
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...