×

மதுக்கடை மங்கை !

நன்றி குங்குமம் தோழி

மதுக்கடை வேண்டாம்... மதுக்கடையை எதிர்த்து பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம் என ஒரு பக்கம் போராட்டம் நடத்தப்படும் நிலையில் மதுக்கடையில் வேலை கேட்டு சில பெண்கள் போராடி வருகின்றனர். அதில் ஷைனி ராஜிவ் என்ற  பெண் வெற்றியும் பெற்றுள்ளார்.
நம்மூர் டாஸ்மாக் போல் கேரளாவிலும் கேரள மாநில மதுபானங்கள் கழக அமைப்பு இயங்கி வருகிறது.

அரசு வேலை என்பதால் தான் மதுக்கடையில் பணிபுரிய பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.  கேரளாவின் வடக்கு பரவூர் பகுதியில் புத்தன்
வேலிக்கராவில் உள்ள மதுக்கடையில் ஷைனி ராஜிவுக்கு வேலை கிடைத்துள்ளது. கிங்ஃபிஷர், நெப்போலியன், சிக்னேச்சர், ஹன்டர், உட்பெக்கர் என்ற மதுபானங்களின் பெயர்களுடன் அதன் விலைகளும் ஷைனிக்கு அத்துப்படி.
 
இங்கு லோயர் டிவிசன் கிளார்க்காக பணிபுரியும் ஷைனி இந்த வேலையை பெற கடும் போராட்டத்தை சந்தித்துள்ளார். பி.ஏ பொருளாதாரத்தில் பட்டப்படிப்புடன், ஆசிரியர் பணிக்கான பி.எட் படிப்பும் முடித்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் ஆசிரியர் பணிக்கு அவர் தேர்வு பெறவில்லை. கடந்த 2012ம் ஆண்டு கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மதுக்கடை பணியாளர் தேர்வில் 526வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.

ஆனால் அவர் பெண் என்பதால் மதுக்கடையில் நியமிக்க முடியாது என அரசு மறுத்துவிட்டது. பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடி 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கடந்த 2017ல் வேலை பெற்றார். பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஷைனி அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுதான் மதுக்கடை பணியில் சேர்ந்துள்ளார்.
 
பணிக்கு சேர்ந்த அன்று கடைக்கு வந்த குடிமகன்கள் அங்கு பெண் ஒருவர் வேலையில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். தற்போது  மதுவின் விலைப்பட்டியல், மதுவின் இருப்பு மற்றும் விற்பனை பற்றிய குறிப்புகளை பதிவேட்டில் குறித்துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

43 வயதாகும் ஷைனி வேலையிடங்களில் பாலின சமத்துவம் இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மதுபானக்கடையில் எவ்வித பிரச்னை இன்றி வேலை பார்த்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்கள் மதுபானக் கடை வேலைக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!