பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

நன்றி வசந்தம்

என்ன கூந்தலுக்கு என்ன நிவாரணம்?

உங்கள் கூந்தல் எண்ணெய்ப் பசையானது என்றால் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள். கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூ வுடன் சேர்ந்த கண்டிஷனர் தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். வறண்ட கூந்தல் எனில், லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.

சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள். துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய்ப்பசையும் இல்லை. வறட்சியும் இல்லாத சாதாரணக் கூந்தல் என்றால் வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள். வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள்

ஹெர்பல் ஆயில்!

நெல்லிக்காய் - 100 கிராம், கீழாநெல்லி இலை - 100 கிராம், கறிவேப்பிலை - 100 கிராம், செம்பருத்தி பூ - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 லிட்டர்.

செய்முறை:  மூலிகைகளையெல்லாம் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும். மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் மூன்று நாட்கள் பயன்படுத்திவர, கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.

Home made நேச்சுரல் ஷாம்பு

தேவையானவை: கற்றாழையின் சதைப்பகுதி 20 கிராம், பூந்திக்காய் - 20 கிராம், செம்பருத்திப் பூ - 3.

செய்முறை: பூந்திக்காயை முதல் நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து விடவும். மறுநாள் காலையில், பூந்திக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, கற்றாழையின் சதைப்பகுதி, செம்பருத்திப் பூ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதை ஷாம்புவாக உபயோகிக்க, கூந்தல் பட்டுப் போல மின்னும்.

Related Stories: