×

நீதான் அவனையும் பார்த்துக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?


அன்புத் தோழி...

திருமணம் ஆனதும் பிழைப்புத்தேடி நானும் என் கணவரும் பெருநகருக்கு குடிபெயர்ந்தோம். வேலை நிரந்தரம் இல்லை என்றாலும் மாதச் சம்பளம் என்பதால் தடையில்லாமல் எங்களின் வாழ்க்கை நகர்ந்தது. இரண்டு குழந்தைகள், அன்பான கணவர், நிலையான வாழ்க்கை என்று நிம்மதியாக நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் அதில் பெரிய புயல் வீசும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மாதம் ஒரு முறை குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதை நானும் என் கணவரும் வழக்கமாக கொண்டு இருக்கிறோம். ஒரு முறை அவ்வாறு வெளியே சென்ற போது கணவரின் ஊர்க்காரரை சந்திக்க நேர்ந்தது.

இருவரும் பால்ய நண்பர்கள். ஒரு ஊர் வேறு. நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால், இருவரும் உற்சாகமாயிட்டாங்க. அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார்கள். நண்பர்களுடன் மட்டுமே நிகழ்ந்து வந்த சந்திப்பு குடும்ப சந்திப்பாக மாறியது. இரு குடும்பங்களும் நன்றாக பழக ஆரம்பித்தோம்.

என் கணவரின் நண்பருக்கு ஒரு குழந்தை. அவரின் மனைவி என்னிடம் நன்றாக பழக ஆரம்பித்தார். எல்லாருடனும் சிரித்து பேசினாலும், கணவன், மனைவி மத்தியில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாக நான் உணர்ந்தேன். அதை என்னால் அவர்களிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. அவர்களும் அதை காட்டிக் கொள்ளவில்லை. கணவரின் நண்பர் நகைச்சுவையாக பேசுவார். அவர் இருக்குமிடம் எப்போதும் ஜாலியாக கலகலப்பாக இருக்கும்.

ஒரு நாள் என் கணவரிடம், அவர் நண்பர்மனைவி தன்னை மதிப்பதில்லை, எப்போதும் சண்டை போடுவதாக தெரிவித்தார். ஆனால் இவர் தன் மனைவி மேல் அதிக பாசம் வைத்து இருப்பதாகவும், அதை அவர் புரிந்து கொள்ளாமல் எப்போதும் சண்டை போட்டு வருவதாக தெரிவித்தார். இவர் சொல்வதை கேட்ட போது எனக்கு அவரின் நண்பர் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சாலை விபத்தில் இறந்து விட்டார். குழந்தை அவரது மாமியாரிடம் வளந்து வருகிறது. இவர் தனிமரமாக நின்றார். அவரின் கஷ்டத்தை புரிந்து என் கணவர் அவரை எங்கள் வீட்டிலே தங்கச் சொன்னார். அதை மறுத்தவர், சாப்பிட மட்டும் அவ்வப்போது வந்து செல்வார்.

என் கணவரும், அவரை பார்த்துக் ெகாள் ஆதரவில்லாமல் இருக்கான் என்றார். ஒருநாள் மதியம் நண்பர் சாப்பிட வந்திருந்தார். சோகமாக இருந்த அவரிடம், ‘நடந்ததை மறந்து, மகிழ்ச்சியாக இருக்க பாருங்க’ன்னு சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானம் படுத்த அருகில் சென்ற போது என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். எனக்கு என்ன செய்வதுன்னு புரியல. பிறகு அவர், ‘உன் அன்பினால்தான் நான் உயிேராடு இருக்கிறேன். இல்லாவிட்டால் செத்துப் போயிருப்பேன். இந்த அன்பு எப்போதும் கிடைக்குமா?

என்றவர் என் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு உடனே சென்றுவிட்டார். அதன் பிறகு 2 நாட்கள் அவர் வீட்டுக்கு வரவில்லை. என்னால் அவரை பற்றி என் கணவரிடமும் கேட்க முடியவில்லை. என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. பயமும், பதட்டமுமாகவே இருந்தது.

இரண்டு நாள் நண்பனை காணாது, என் கணவர் அவரிடம் பேசிய போது, அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரியவந்தது. அதனால் என் கணவர் அவரை எங்களுடனே தங்க சொல்லிட்டார். இது எங்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது. அந்த நெருக்கம் எல்லையை மீறும் அளவுக்கு போனது. என்னால் அதை தடுக்கவும் முடியவில்லை.

 அவர் கவலையில் இருந்து மீண்டால் போதும் என்பதால் நான் தடுக்கவில்லையா, இல்லை எனக்கு அவர் மேல் ஏற்பட்ட விருப்பமான்னு இன்று வரை குழப்பமாகவே இருக்கிறது. எப்படி இருந்தாலும் அந்த உறவு தொடர ஆரம்பித்தது.

ஆனால் இப்போது அது எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியாக மாறியுள்ளது. காரணம் என் கணவர் என் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை. அவர் என்னை அவரின் அம்மாவின் ஸ்தானத்தில் வைத்த பார்க்கிறார். அப்போது நான் முதல்முறையாக தவறு செய்துவிட்டதை உணர்ந்தேன்.

கணவரின் கள்ள கபடமற்ற எண்ணம் என்னை மேலும் குடைய ஆரம்பித்தது. எங்கள் இருவர் மீதும் நம்பிக்கை வைத்து தான் பழக விட்டார். ஆனால் நான் அதற்கு துரோகம் செய்துவிட்டேன். அவர் நண்பரிடம் இனி உறவினை தொடர வேண்டாம் என்று கூறியும் அவர் மறுத்துவிட்டார். நடந்த தவறுக்கு நானும் காரணம் என்பதால் அவரிடம் ‘வீட்டுக்கு வராதீர்கள்’ என்று சொன்னால், ‘செத்து விடுவேன்’ என்கிறார்.

என்ன செய்வது என்று புரியவில்லை என் கணவரிடமும் சொல்ல முடியவில்லை. இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்யவும் எண்ணம் வரவில்லை. இனி நேர்மையாக வாழ நினைக்கிறேன். இதிலிருந்து எப்படி மீள்வது? என்ன செய்வது எனக்கு வழி காட்டுங்கள் தோழி…
இப்படிக்கு ெபயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,நீங்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்களது கணவரின் நண்பரின் ஒரு பக்கம் தான் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவர் மனைவியை குறித்து அவர் சொன்னதை மட்டும் தான் நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் மனைவியிடம் கேட்டு இருந்தால் மட்டுமே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்திருக்கும்.

ஒரு சார்பான முடிவு தான் அவர் மீது உங்களுக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரக்கம் அன்பு ஆதரவு எல்லாம் நியாயமானது தான். ஆனால் அதையும் மீறி ஒரு குடும்ப உறவை சிதைக்கும் போக்கு உங்கள் வாழ்க்கையையும் சேர்த்து அழித்து விடும் என்பதை இப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்கள். அதுவே மாற்றத்திற்கான நல்ல ஆரம்பம்.

நம்மைவிட நம் குழந்தைகளின் எதிர்காலம் ரொம்பவே முக்கியம். உங்கள் கணவரின் நண்பர் எதிர்காலம் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அது முக்கியமும் இல்லை. காரணம் அவர் தனிப்பட்டவர். மனைவியும் இல்லை, குழந்தையும் அவர் பாதுகாப்பில் வளரவில்லை. மேலும் அவர் உங்களிடம் எவ்வளவு காலம் நட்பு தொடர்வார் என்றும் தெரிய வாய்ப்பில்லை.

அதனால் இந்த மாற்றம் நல்ல ஆரம்பம். நீங்கள் அவருக்கு சாப்பாட்டைத் தவிர வேறு ஏதும் தரத் தேவையில்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். அதை அவருக்கும் உணர்த்துங்கள். இந்த உறவு இனி வேண்டாம் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் அவரிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் முடிவில் நீங்கள் திடமாக இருங்கள். அவர் உங்களை உணர்வுரீதியாக பிளாக் மெயில் செய்யலாம்.

அதை அலட்சியப் படுத்துங்கள். தன்னை நம்பும் நல்ல நண்பருக்கு துரோகம் செய்தவர் தன் மனைவியை எப்படி நடத்தியிருப்பார் என்பது உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

எனவே உங்களின் இந்த உறுதியான முடிவு அவரை உங்களிடம் இருந்து தானாக விலக வைக்கும். இனி உங்கள் கவனத்தை கணவர், குழந்தைகள் பக்கம் திருப்புங்கள். அவர்களுக்கு உலகின் சிறந்த அன்பையும் ஆதரவையும் கொடுங்கள். அது உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். தவறானவர்களிடம் இருந்து உங்களை விலக்கி வைக்க உதவும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!