மகப்பேறுக்கு இரட்டிப்பு நிதி

நன்றி குங்குமம் தோழி

2019 பெண்களுக்கான பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டில் பெண் வாக்காளர்கள் இடம்பெறுவது புதிதல்ல. ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமானது. முதன் முதலாக முழுநேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்தது புதிதானது. இதற்கு முன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் நிதியமைச்சர் பதவி விலகியதை  அடுத்து 1970ம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டை முன் வைத்தார்.

17வது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 78 பெண் எம்.பி-க்கள்  சென்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி பெண்கள் முன்பிருந்ததை விட அரசியலிலும் இன்னும் பல துறைகளிலும்  தங்களது இடத்தினை நிரப்ப முன் வந்திருக்கும் சூழலில், 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை

காட்டிலும் 17% அதிகமாகும்.  

“பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேற முடியும், சமூகம் முன்னேற முடியும்” என்று விவேகானந்தர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறி பெண்களுக்கான பட்ஜெட் அம்சங்களை அறிவிக்க ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்.பெண்களை மையப்படுத்திய கொள்கைகளாக  அல்லாமல், பெண்கள் தலைமையிலான முன்னெடுப்புகளாக மாற்றப்படும் என்று கூறிய மத்திய நிதி அமைச்சர், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் வகையிலான கமிட்டி உருவாக்கப்படும் என்றும் கூறினார். மேலும், “நாட்டின் பெண்கள் முன்னேறாமல் உலகில் எந்த நாடும் முன்னேற முடியாது.  பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என நம்புகிறது இந்த மத்திய அரசு.

பெண்களின் பங்களிப்பைக் கிராம பொருளாதாரம் அதிகமாக ஊக்குவிக்கிறது. சமூக பொருளாதார மேம்பாடு என்பது பெண்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.  மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். ஒரு சுய உதவிக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் இருந்தால் கூட, முத்ரா திட்டத்தின் கீழ் அந்த சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக்கு தனித்திட்டம் புதிதாக உருவாக்கப்படும், அனைத்து துறைகளிலும் பெண்கள் வழிநடத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படும்.  நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆண் வாக்காளர்களுக்கு இணையாக, பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்” என்று கூறியவர்  பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில் சமூக நலத்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு , சமூக நலன் போன்றவற்றை உள்ளடக்கிய சமூக நலத்துறைக்குக் கடந்த நிதி ஆண்டில் ரூ.2,551 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டில் கூடுதலாக  ரூ.4,178 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.1,200 கோடிக்குப் பதிலாக தற்போது ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு நிதி வழங்கப்படும்.குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ரூ.925 கோடியிலிருந்து ரூ.1,500 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி சேவைக்கு ரூ.19,843 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் திட்டத்தின் கீழ் ரூ.280 கோடியும், தேசிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ரூ.3,400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அதிகார மையத்திற்கான நிதி ரூ.115 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்கும் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டத்திற்கான நிதி ரூ.30 கோடியிலிருந்து ரூ.40 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைப்பதற்கான நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.165 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, மீட்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு போன்றவற்றுக்கான பெண்கள் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ரூ.20 கோடியிலிருந்து ரூ.30 கோடியாகவும், கைம்பெண்களுக்கான வீடுகள் திட்டத்திற்காக ரூ.8 கோடியிலிருந்து ரூ. 15 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனோடு பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ரூ.1,315 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் பெண்கள், குழந்தைகள் நலத்துறைக்கு 24,758  கோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 17% உயர்த்தப்பட்டு 29,164 கோடியே 90 லட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 “பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் ஒதுக்கப்பட்ட துறைக்கு இல்லாமல், அந்த நிதி மற்ற துறைக்காக இருக்கிறது. பெண்கள் மேம்பாட்டிற்காக எந்த அரசும் பட்ஜெட்டில் பிரதானமாக இருந்ததுக் கிடையாது. உதாரணமாகப் பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (2005) நடைமுறைப் படுத்துவதில் பல மாநிலங்களில் மோசமானதாகவே இருக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் சமூக ஆராய்ச்சி மன்ற இயக்குனர் ரஞ்சன குமாரி.

“பெண்களுக்கான நீதி உத்தரவாதமாகக் கிடைக்க எல்லா கொள்கைகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படுவதும், கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதும் அவசியம்” என்று கூறும் குமாரி, “பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பதையும், சிசுக் கொலைகளை ஒழிப்பதிலும் இந்த அரசு முதன்மையானதாகச் செயல்படுத்தப்பட வேண்டும். 63% பெண்கள் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். படித்த பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அதில் 25 வயது முதல் 55 வயது வரையுள்ள 27% பெண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்” என்கிறார்.

அரசு என்னதான் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தாலும், அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்துகிறதா? அப்படி நடைமுறைப்படுத்தினாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைகிறதா என்ற கேள்வி நீண்ட காலமா நிரூபணம் ஆகிவருகிறது. கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி அந்தந்தத் துறைக்குச் சென்றதா, அப்படி இல்லையென்றால் அந்த பணம் என்னவானது என்ற கேள்வி, இந்த அரசிற்கு ஒவ்வொரு ரூபாய் செலுத்தும் நமக்கு ஏற்பட்டதா என்ற கேள்விகளின் எண்ணிக்கைகள்தான் நீள்கிறது.

அன்னம் அரசு

Related Stories: